×

அந்தியோதயா ரேஷன் திட்டத்தில் அதிரடி மாற்றம் 35 கிலோ உணவு தானியம் வழங்குவதில் புதிய கட்டுப்பாடு: நபர் ஒருவருக்கு 7 கிலோ மட்டுமே தர ஒன்றிய அரசு திட்டம்

புதுடெல்லி: ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் உணவு தானிய அளவை, குடும்பத்துக்கு 35 கிலோ என்பதற்குப் பதிலாக நபர் ஒருவருக்கு 7 கிலோவாக மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.  வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 35 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் தரப்படுகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் திருத்தம் கொண்டுவர ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய உணவுப் பாதுகாப்பு (திருத்தக்) மசோதா 2026-க்கான பொதுமக்களின் கருத்துகளை ஜூலை 13-ம் தேதி வரை ஒன்றிய உணவு அமைச்சகம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய உணவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ தற்போதைய நடைமுறைப்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அந்தியோதயா ரேஷன் அட்டைகளுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தாலும் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியம்(அரிசி/கோதுமை) வழங்கப்படுகிறது. அதேசமயம், மற்ற முன்னுரிமை குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் வழங்கப்படுகிறது. பரம ஏழைகளாக உள்ள குடும்பங்களுக்கு உதவதான் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உணவுபொருள் கிடைப்பதில் முரண்பாடு நிலவி வந்தது. குறைந்த உறுப்பினர்களை கொண்ட அந்தியோதயா ரேஷன் அட்டைக்கு அதிக உணவு தானியம் கிடைத்து வந்தது. இந்த ஏற்றத்தாழ்வைக் களையும் வகையில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி அந்தியோதயா ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் 7 கிலோ உணவு தானியம் என்ற அடிப்படையில் ஒரு அட்டைக்கு அதிகபட்சமாக 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படும்.

புதிய திட்டத்தின்படி, அந்தியோதயா ரேஷன் அட்டையில் இரண்டு நபர்கள் இருந்தால் மாதம் 14 கிலோவும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் அதிகபட்ச வரம்பான 35 கிலோவும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தானியங்களின் அளவு அதிகரிக்கும் என்பதால் பெரிய குடும்பங்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு செய்துள்ள இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அந்தியோதயா ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 5 பேருக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இனி 35 கிலோ உணவு தானியம் கிடைக்கும். குறைவான குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் அவர்களுக்கு விகிதாச்சார முறைப்படி குறைவான உணவு தானியம் கிடைக்கும் சூழல் உருவாகும்.

அதாவது குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தால் கூட அதிகபட்சமாக 28 கிலோ உணவு தானியம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Union government ,New Delhi ,
× RELATED மத்திய கிழக்கு நெருக்கடி காரணமாக...