திங்கள்சந்தை: நுள்ளிவிளை ரயில்வே மேம்பால பணிகள் மந்தகதியில் நடப்பதால் கடும் இன்னலை சந்தித்து வரும் பொதுமக்கள் கூட்டமைப்பை உருவாக்கி போராட்டதுக்கு தயாராகி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக தோட்டியோடு- திங்கள்நகர்- புதுக்கடை சாலை உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில்- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை விரிவாக்க பணிகளுக்காக இந்த சாலையில் உள்ள நுள்ளிவிளை பழைய பாலம் கடந்த ஜனவரி மாதம் உடைக்கப்பட்டது. 8 மாதத்தில் அங்கு புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் 5 மாதங்களை கடந்தும் ரயில்வே மேம்பாலத்திற்கான எந்தவித ஆக்கப்பூர்வ பணிகளும் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகையில், நுள்ளிவிளை பழைய பாலம் உடைக்கப்பட்டதும், இரட்டை ரயில் பாதைக்காக புதிய தண்டவாளம் அவசர அவசரமாக அமைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தண்டவாளத்தில் ரயில்களில் சோதனை ஓட்டமும் நடந்து முடிந்தது. தற்போது அந்த தண்டவாளம் ரயில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. அதே நேரம் மேலே சாலை மார்க்கமாக செல்லக்கூடிய ரயில்வே மேம்பாலம் பணி மந்தகதியில் நடக்கிறது. நுள்ளிவிளை பாலம் உடைக்கப்பட்டதால் புதுக்கடை, கருங்கல், திக்கணங்கோடு, குளச்சல், மண்டைக்காடு, நெய்யூர், திங்கள்நகர், இரணியல் பகுதிகளில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு டவுன் பஸ்கள் கண்டன்விளை, பேயன்குழி, கொன்னக்குழிவிளை 4 வழிச்சாலை வழியாக கடும் சிரமங்களுடன் சென்று வருகின்றன.
நுள்ளிவிளை சாலை மாவட்டத்தின் முக்கிய மாநில நெடுஞ்சாலை மற்றும் 500க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களை இணைக்கும் சாலை என்பதால் இந்த சாலை பரபரப்பாக காணப்படும். தற்போது சாலை மூடப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 8 மாதங்களில் பாலம் பணி முடிவடைந்து விடும் என இருந்த மக்களுக்கு தற்போது ஆமை வேகத்தில் நடந்து வரும் பணியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட பில்லர்கள் அமைக்க வேண்டிய நிலையில் இதுவரை வெறும் ஒரு சில பில்லர் குழிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. பில்லர் குழி தோண்டும் மெஷின்கள் அவ்வப்போது இயங்காமல் உள்ளன.
மேலும் மாற்று பாதையான இரட்டை கரை கால்வாய் வழியாக வடசேரி செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக வரும் டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. சமீபத்தில் தோட்டியோடு ஜங்ஷனில் கூட்ட நெரிசலால் முன்வாசல் வழியாக வெளியே வீசப்பட்டு மூதாட்டி சகுந்தலா சம்பவ இடத்தில் பலியான சம்பவம் நடந்தது. இதனால் திங்கள்சந்தையில் இருந்து தக்கலை வழியாக இயக்கப்படும் பஸ்களை பேயன்குழி வழியாக இயக்க கோரிக்கை வைத்து வருகிறோம்.
அந்த கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நுள்ளிவிளை ரயில்வே மேம்பால பணிகளை துரிதமாக மேற்கொண்டு உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மந்தமாக நடக்கும் ரயில்வே மேம்பால பணிகளை கண்டித்து சாலையை பயன்படுத்துவோர் கூட்டமைப்பை உருவாக்கி மிகப்பெரிய அளவில் கண்டன போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.
மாற்றுப்பாதையில் தார்சாலை அமைக்க வேண்டும்
பேயன்குழியில் இருந்து 4 வழிச்சாலைக்கு செல்லும் மாற்று சாலையான இரட்டைக்கரை சானல் பாதை அதிகப்படியான வாகன போக்குவரத்தால் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சமீபத்தில் அரசு பஸ் ஒன்று கவிழும் நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டர் பிரதாப் சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சாலையில் ஜல்லிகள் பரப்பி செப்பணிடப்பட்டது. ஆனால் தார்சாலை அமைப்பதற்கான எந்த பணியும் நடக்கவில்லை. எனவே பயணிகள் நலன்கருதி இரட்டைக்கரை கால்வாயின் இருபக்க சாலையை தார்சாலை அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
