நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. 20வது வார்டு தம்மத்துகோணத்தில் சானல் கரையோரம் உள்ள சாலை சுமார் இரட்டரை மீட்டர் அகலத்தில் மண்சாலையாக இருந்தது. சாலை சேதமாகி மிகவும் மோசமாக காணப்பட்டது. இந்த சாலையில் நடந்து மட்டும் தான் செல்லமுடியும். ஆகவே இந்த சாலையை விரிவுப்படுத்தி காங்கிரீட் சாலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் சானல்கரை சாலையை விரிவுப்படுத்தி காங்கிரீட் அமைக்க உத்தரவிட்டது.
அதன்படி சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு சானல்கரையோரம் பலகை அடித்து, இரண்டரை மீட்டர் அகலம் உள்ள சாலையை 4 மீட்டர் அகலத்திற்கு விரித்து காங்கிரீட் போடும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தற்போது சாலை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: தம்மத்துகோணம் வளர்நகர் பகுதியில் அனந்தனார்சானலில் இருந்து பிரிந்து வரும் கிளைகால்வாய் செல்கிறது. இந்த சானல் கரையோரம் ஒரு புறம் தார்சாலை அமைக்கப்பட்டு வாகனங்கள் சென்று வருகிறது.
மறுகரையோரம் மண் சாலையாக இருந்தது. நாளடைவில் மண்சாலை உடைத்து சானலில் விழுந்து அந்த கரையோரம் நடந்து மட்டுமே செல்ல முடியும் நிலை ஏற்பட்டது. தற்போது சுமார் அரைகிலோ மீட்டர் நீளத்திற்கு 4 மீட்டர் அகலத்திற்கு காங்கிரீட்டால் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சானலின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியும். என்றனர்.
