×

குற்றாலத்தில் இதமான சூழல் நிலவினாலும் பிரதான அருவிகளில் சொற்ப அளவில் விழும் தண்ணீரில் தலையை நனைத்த சுற்றுலா பயணிகள்: புலியருவில் நீர்வரத்து அடியோடு நின்றதால் ஏமாற்றம்

 

தென்காசி: குற்றாலத்தில் 10 நாட்ளுக்குப் பிறகு நேற்று இதமான சூழல் நிலவினாலும் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. புலி அருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். குற்றாலத்தில் இந்தாண்டு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் சீசன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக சாரல் நன்றாக இருந்தது. கடந்த 10 தினங்களாக சாரல் இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து சற்று இதமான சூழல் நிலவியது. பகல் முழுவதும் தென்றல் காற்று வீசியது.

மாலையில் லேசான மேகம் திரண்டு காணப்பட்டது. எனினும் தொடர்ந்து 10 தினங்களாக சாரல் இல்லாத காரணத்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து மிக மிக குறைந்து விட்டது. புலியருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக சிறிதளவு தண்ணீர் விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணீர் இல்லை. ஐந்தருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றிலும் குறைவாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துவிட்டது.

வரும் சுற்றுலாப் பயணிகளும் தண்ணீர் குறைவு காரணமாக வரிசையில் நின்று தலையை நனைத்துக் கொள்கின்றனர்.‌ இன்னும் ஒரு சில தினங்களில் சாரல் பெய்தால் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். அப்படி இல்லாமல் வெயில் தொடரும் பட்சத்தில் மெயினருவியிலும் தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட வாய்ப்பு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Tags : Courtallam ,Puliyaru ,Tenkasi ,Mainaruvi ,Aindaruvi ,Old Courtalla ,Puliyaruvi ,Courtallam… ,
× RELATED ராணிப்பேட்டை அருகே மலைப்பகுதியில்...