திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

*வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கடலூர் : திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் மற்றும் லாரன்ஸ் சாலையில் ஷாப்பிங் மால், பூ மார்க்கெட், துணிக்கடைகள் உள்ளது. கடலூர் சீமாட்டி சிக்னலில் இருந்து பேருந்து நிலையம் செல்வதற்கு லாரன்ஸ் சாலையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

லாரன்ஸ் சாலையில் உள்ள நடைபாதை அருகே சிறு, சிறு வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்துள்ளனர். இந்த நடைபாதை வழியாக ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தினமும் நடந்த சென்று வருகின்றனர்.

இங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கடலூர் மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து புதிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 20 நாட்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதாள சாக்கடையில் கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, இதன் வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அங்கு வணிகம் செய்பவர்களுக்கும் தொற்று நோய் ஏற்படும் நிலையில் உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரன்ஸ் சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரை அகற்றி, வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: