மதுரை: முழுமையாக வறண்டு காட்சியளிக்கும் சாத்தியார் அணையை முறையாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை மூலம் சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெற்று வருகின்றன.
29 அடி உயரம் உயரம் கொண்ட சாத்தியார் அணை தற்போது போதிய நீர் இல்லாததால் முழுமையாக வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த அணை முழுமையாக வறண்டதால் நீர்ப்பாசன வசதி இல்லாமல் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
சாத்தியார் அணையை நம்பியுள்ள சுமார் 100 கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனிடையே சாத்தியார் அணையை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதுஒரு பக்கம் இருக்க, அணை வறண்டுள்ளதை பயன்படுத்தி சாத்தியார் அணையை தூர்வாரி உடனடியாக ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதை செய்து முடித்தால் சுமார் 1 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்குள் சாத்தியார் அணையை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
