×

மக்களவையில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை பலம் பெற முயற்சி இடஒதுக்கீட்டை ஒழிப்பதே பாஜவின் உண்மையான இலக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சிகளில் இருந்து பலர் கட்சி மாறுவதற்கு ஒரே காரணம், இந்திய அரசியலின் சாணக்கியர் என தனக்கு தானே கூறிக் கொள்ளும் அமித்ஷா கடந்த ஏப்ரல் 17ல் மக்களவையில் சந்தித்த அவமானம் தான். தொகுதி மறுவரை தொடர்பான 3 மசோதாக்களை நிறைவேற்றுவதாக அவர் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்திருந்தார். ஆனால், அவரால் மக்களவையில் 298 வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை.

அன்று சந்தித்த அவமானத்திற்கு பழிவாங்க, இன்று கட்சிகளை உடைக்கும் அரசியலில் அவர் ஈடுபட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை பிளவுபடுத்த முயற்சிக்கிறார். மக்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்த 3ல் 2 பங்கு பெரும்பான்மை (352 ஓட்டு) பலம் வேண்டும். இதில் பாஜவின் உடனடியான இலக்கு தொகுதி மறுவரையறை மசோதா என்றாலும் அது அவர்களின் முதல்படி தான். பாஜவின் உண்மையான இலக்கு இடஒதுக்கீட்டை ஒழிப்பது.

அரசியலமைப்பு திருத்துவதற்கான 3ல் 2 பங்கு பெரும்பான்மை பெற்று, அதன் மூலம் இடஒதுக்கீட்டை முற்றிலும் ஒழிப்பதே பாஜவின் இலக்கு. தற்போதைய நிலையில் அமித்ஷா, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா 2 கட்சிகளையும் உடைத்து விட்டார். அதனால் 298ல் இருந்து கூடுதலாக 26 எம்பிக்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளனர். அதாவது 324 இடங்களை அமித்ஷா எட்டியுள்ளார். இன்னும் அவர் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* கரப்பான் பூச்சி கட்சி கருவியாகவே உள்ளது
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘இது அரசுக்குள்ளேயே செயல்படும் அதிகார மையங்கள் மூலம் தூண்டப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். இளைஞர்களின் அதிருப்தியின் வெளிப்பாடு என்றும் சிலர் கூறுகிறார்கள். எதையும் நிரூபிக்க வழியில்லை. ஆனால், இளைஞர்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக மட்டுமே கரப்பான் பூச்சி கட்சி உள்ளது.

ஜனநாயக அமைப்புகள் வெறும் போராட்ட இயக்கங்களை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. எனவே, நிறுவப்பட்ட அரசியல் கட்சிகளே இந்த விவகாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என நான் நினைக்கிறேன். காங்கிரசில் இருந்து விலகி பாஜவில் இணைந்த இளம் தலைவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது’’ என்றார்.

Tags : BJP ,Lok Sabha ,Congress ,New Delhi ,General Secretary ,Jairam Ramesh ,Amit Shah ,Chanakya ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...