×

மபி முதல்வர் விவகாரத்தில் பதிலடி கார்கே, அவரது மகன் மீது பாஜ நில அபகரிப்பு புகார்: கர்நாடகாவில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்தியபிரதேச முதல்வர் மோகன் யாதவ்வின் குடும்பத்தினர் உஜ்ஜைன் நகரில் அரசு திட்டங்கள் நடக்கக் கூடிய பகுதிகளில் ரூ.45 கோடி மதிப்பிலான நிலங்களை வாங்கி குவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மோகன் யாதவ் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜ தலைமையகத்தில் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடந்த 2016ல் குல்பர்கா மாவட்டத்தில் 30 ஆண்டு காலத்திற்கு, கார்கே, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள சித்தார்த்த விஹார அறக்கட்டளைக்கு 19 ஏக்கர் நிலத்தை வழங்கியது. பின்னர் அது நிரந்தர குத்தகையாக மாற்றப்பட்டு கார்கே குடும்பத்தினரின் நிரந்தரச் சொத்தாக மாற்றப்பட்டது. சித்தராமையா முதல்வராக இருந்தபோது, 2010ல் கர்நாடக காங்கிரஸ் அரசு கார்கேவுக்கு 8,125 சதுர மீட்டர் நிலத்தை வழங்கியது. இந்த நிலத்தை வழங்குமாறு பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பிடிஏ அதற்கு உடன்படாததால், அங்கிருந்த அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு, இறுதியில் அந்த நிலம் கார்கேவுக்கு வழங்கப்பட்டது. இது போல, கார்கே மற்றும் கர்நாடக அரசில் அமைச்சராக உள்ள அவரது மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் கர்நாடகாவில் தங்கள் அதிகாரம், செல்வாக்கை பயன்படுத்தி பல நிலங்களை அபகரித்துள்ளதுடன், நிலக் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர். இது ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானது. அப்படியிருந்தும் மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

Tags : Garke ,Mabi ,Karnataka ,NEW DELHI ,MADHYA PRADESH ,MOHAN YADAV ,RS ,CRORE ,OF UJJAIN ,Chief Minister ,
× RELATED கிரெடிட் கார்டு மோசடிகள் இழந்த பணத்தை...