இட்டாநகர்: அருணாச்சலப்பிரதேசத்தின் கெயி பன்யோர் மாவட்டத்தில் நேற்று காலை கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின. சில இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளத்தின் காரணமாக சுமார் 18 வீடுகள் சேதமடைந்தன. அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யாசலி வட்டத்திற்குட்பட்ட பூசா அருகே உள்ள நீப்கோ திட்டக் குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். கனமழையில் காரணமாக கட்டுமானத்தில் இருந்த தடுப்பு சுவர் ஒன்றும் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றியுள்ள தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் பெருமளவு தண்ணீர் புகுந்தது. கனமழை காரணமாக மாவட்டத்தில் சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடின் மற்றும் ஹோஜ் ஆகிய இடங்களுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையின் மூன்று பகுதிகள் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. திடீர் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் மாயமாகியுள்ளனர். ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
இதேபோல் மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் மல்ஷேஜ் காட் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மும்பையில் பருவமழை தொடங்கிய மறுநாளே பெய்த பலத்த மழையினால் சாலை மற்றும் ரயில்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சில இடங்களில் 24மணி நேரத்தில் 300மி.மீக்கும் அதிகமான மழை பதிவானது.
