பெரம்பலூர்: பெரம்பலூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசின் நிதிக்காக நாங்கள் இருமொழி கொள்கையில் சமரசம் செய்யபோவது இல்லை. அதற்காக ஒன்றிய அரசின் கல்விநிதியையும் தமிழ்நாடு அரசு வாங்காமல் விடப் போவதும் இல்லை. தமிழ்நாட்டில் கல்வித்துறையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கையிலும் தற்போது சமச்சீரான நிலை இல்லை. ஏஐ போன்ற புதிய பாடப்பிரிவுகளுக்கும், மருத்துவ பாடங்களுக்கும் மவுசு கூடி வருகிறது.
அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி என்று தவெக அரசு பாரபட்சம் பார்ப்பது இல்லை. தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. தமிழக மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த அரசு மேல்நிலைப்பள்ளிகளில் விரைவில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க அரசு ஆலோசித்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டு வரும் நிதிகளில் லீக்கேஜ் தடுத்தாலே நிதி கூடுதலாகி பள்ளிகள் தரம் உயர்ந்துவிடும்.
பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடம் மற்றும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் கலந்தாய்வு போன்ற மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்துள்ளோம். விரைவில் தகுதி மற்றம் திறமை இரண்டின் அடிப்படையில் நிரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* தவெகவினருக்கு எச்சரிக்கை
‘‘பள்ளிக்கூட நேரங்களில் மாணவர்களுக்கு இடையூறு செய்யும் தவெக நிர்வாகிகளை எவ்வித சமரசமுமின்றி கட்சியில் இருந்து விலக்குவோம். ஏற்கனவே பள்ளியொன்றில் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றிய செயலாளர் ஒருவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கி உள்ளோம். இனியும் தொடர்ந்தால் அதில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்து உள்ளார்.
