×

திமுக ஜென்-சி கூட்டத்தை நடத்திய அன்பானந்தனை கைது செய்ய முயற்சி காவல்துறையை ஏவி மிரட்டினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: திமுக ஜென்-சி கூட்டத்தை நடத்தி வந்த அன்பானந்தனை நள்ளிரவில் போலீசார் கைது செய்ய முயன்ற நிலையில், காவல்துறையை ஏவி இளைஞர்களை அச்சுறுத்த நினைத்தால் வேடிக்கை பார்க்க மாட்டோம், என தவெக அரசுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை அருகே போடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரியப்பன். இவர், திமுகவில் விவசாய அணி மாநில துணை செயலாளராக உள்ளார்.

இவரது இளைய மகன் அன்பானந்தம் (28), திமுகவின் ஜென்-சி ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், முதல்வர் விஜய், த்ரிஷாவுடன் பிறந்தநாள் கொண்டாடியது குறித்து விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை அன்பானந்தம் பதிவிட்டிருந்தார். இதற்கிடையில், தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்த ராஜ் தலைமையில் 10க்கும் மேற்ப்பட்ட போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் அன்பானந்தத்திடம் விசாரிக்க வேண்டுமென அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டை சோதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அன்பானந்தத்தை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது வீட்டில் அன்பானந்தம் இல்லை. இதனை அறிந்த வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், சீனிவாசன் மற்றும் அரியப்பன் மற்றும் சிலர் என்ன வழக்கு, யார் புகார் கொடுத்தது என விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் சரியான பதில் அளிக்கவில்லை.

மேலும் என்ன வழக்கு என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீசார் ஒரு கட்டத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இதை கண்டித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுக ஜென்-சி இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டங்கள் நடத்தி வந்த அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

இதே போல சமீபத்தில், ஜென்-சி கூட்டத்தில் பேசிய கனி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. திமுக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் தவெகவினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது…

இது தான் மாற்றமா? நிர்வாகத்திறனற்ற சோபா மாடல் அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள். திமுக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், திமுக அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* ஜெகதீஸ் பழனிச்சாமியை கைது செய்வார்களா?
முதல்வர் குறித்து விமர்சித்த திமுகவினரை கைது செய்ய போலீசார் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முன்னாள் முதல்வர் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற கட்சி தலைவர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வரும் ‘ரூட்’ அமைப்பின் தலைவர் ஜெகதீஸ் பழனிச்சாமியைத்தான் முதலில் கைது செய்ய வேண்டும்.

தலைவர்களை விமர்சிக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்ததே அவர் தான். தொடர்ந்து அதை செய்து வருகிறார். அவர் தற்போது, முதல்வரின் தனி செயலாளராகவே மாறிவிட்டார். அதனால், ஜெகதீஷ் பழனிச்சாமியை கைது செய்ய அரசு முன்வருமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Anbanandan ,DMK ,Gen-C ,Udhayanidhi Stalin ,Thavega government ,Chennai ,DMK Gen-C ,Youth Secretary ,Thavega government… ,
× RELATED காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில்...