சேலம், ஜூன் 23: தாரமங்கலம் பகுதியில் போதை மாத்திரை விற்ற 2 பேரை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் தாரமங்கலம், நங்கவள்ளி, ஓமலூர் பகுதியில் போதை மாத்திரைகளை மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் விற்பனை செய்து வந்த கும்பலை கடந்த 15 நாட்களுக்கு முன்பு தாரமங்கலம் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில், வீரபாண்டியை சேர்ந்த கிருஷ்ணன் (28), சேலம் சாமிநாதபுரத்தை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி மணி (எ) சுப்பிரமணி (61) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணன், மணி ஆகியோர் ராசிபுரத்தில் உள்ள ஒரு மருந்து கம்பெனி மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி, போதைக்காக இளைஞர்களிடம் ஊசியோடு விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதற்கு முன்பு இதே குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால், கைதான கிருஷ்ணன், மணி ஆகியோரை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், மாவட்ட எஸ்பி குத்தாலிங்கம் மூலம் கலெக்டர் இளம்பகவத்திற்கு பரிந்துரை செய்தார். இப்பரிந்துரையை ஏற்று போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணன், மணி ஆகியோரை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சேலம் மத்திய சிறையில் உள்ள அவர்களிடம் போலீசார் வழங்கினர்.
