கேன்களில் டீசல் வழங்க அனுமதிக்க வேண்டும் உழவு இயந்திரங்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கோவை : கேன்களில் டீசல் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உழவு இயந்திரங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி, துணை தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உழவு இயந்திரங்களை இயக்க தேவைப்படும் டீசலை கேன்களில் வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள், உழவு இயந்திரங்களை கொண்டுவந்தனர்.

அதை காட்சிப்படுத்தி, இவற்றுக்கு டீசல் போடுவதற்கு இவற்றை எப்படி பெட்ரோல் பங்கிற்கு எடுத்துச்செல்ல முடியும். எனவே, கேன்களில் டீசல் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

இதுபற்றி மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:கோவை மாவட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை மேம்படுத்துவதற்கும், உழவு உழுவதற்கும் டிராக்டர், பவர் டில்லர், மினி டிராக்டர் ரோட்டாவேட்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர். பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்காக பவர் ஸ்பிரேயர் பயன்படுத்துகின்றனர். இவை, பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடியவை.

இவற்றை பெட்ரோல் பங்க்-களுக்கு எடுத்துச்செல்ல முடியாது. அதனால், மாமூலாக பெட்ரோல், டீசல் ஆகியவ்றறை 10 லிட்டர், 20 லிட்டர், 30 லிட்டர் கேன்களில் வழங்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்கு இயக்கப்படும் டிராக்டர், பவர் டிரில்லர், ரோட்டா வேட்டர் போன்ற வாகனங்களுக்கு கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்கவேண்டும்.

தற்போது புதிய உத்தரவின்படி 200 லிட்டருக்கு மேல் பெட்ரோல், டீசல் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, விவசாயிகளுக்கு தேவைப்படும் பெட்ரோல், டீசல் போன்றவற்றை விளைநிலங்களுக்கே நேரில் கொண்டுசென்று விநியோகிக்க வேண்டும்.
இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.

Related Stories: