* 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
* மழையில் வாகன ஓட்டிகள் அவதி
கலசபாக்கம், ஜூன் 23: கலசபாக்கத்தில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கொட்டும் மழையில் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசபாக்கம், ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி நேற்று மாலை பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இதேபோல் வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்கள் கலசபாக்கம் பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 2 பஸ்களின் முன்பக்கமும் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் அருண்குமார் மற்றும் 2 பஸ்களில் இருந்த நித்யா(35), சாமிக்கண்ணு(60), வசந்தி(40), பூங்கொடி(38), கல்பனா(38), சுலோச்சனா(80), விஜயா(43), அருண்(25), பூங்காவணம்(45), 3 வயது சிறுமி சிவமித்ரா, காயத்திரி(24), சுதாகர்(43), பாலய்யா(78), ஜெகதீஷ்(49), பத்மா(43), மகேஷ்வரி(43), ராமகிருஷ்ணா(49), உஷா(19), ஷா(18) ஆகிய 20 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கலசபாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கொட்டும் மழையில் காத்திருந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
