×

மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சியில் மாணவர்களுக்கு காலை உணவு சமைக்கும்போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் சமையலர் மயக்கம்

 

மரக்காணம், ஜூன் 23: மரக்காணம் அருகே மரக்காணம் நடுக்குப்பத்தில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும்போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்ததில் சமையலர் மயக்கமடைந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலை உணவு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவர்களுக்கு அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி (34) என்பவர் காலை உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பத்மாவதி மாணவர்களுக்கு காலை உணவு சமைக்க அங்கிருந்த சிலிண்டரை பற்ற வைத்துள்ளார்.

அப்போது சிறிது நேரத்தில் எதிர்பாராதவிதமாக அந்த கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சமையலர் பத்மாவதி அங்கிருந்து வெளியில் ஓடி வந்து மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் பத்மாவதியை மீட்டு வெளியில் அழைத்து சென்றுள்ளனர். தகவலறிந்த மரக்காணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று எரிந்து கொண்டிருந்த கேஸ் சிலிண்டரை முறைப்படி அணைத்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். இந்த தீ விபத்து ஏற்படும்போது அருகில் பள்ளி மாணவர்கள் இல்லாததால் பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் இந்த தீ விபத்தால் மயக்கமடைந்த பத்மாவதியை மீட்டு மரக்காணம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் சமையலர் பத்மாவதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு சமைக்க தனியாக சமையல் கூடம் இல்லை. இதனால் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு சிறிய அறையில்தான் சமையல் செய்கின்றனர். இதனால் கேஸ் சிலிண்டர் மற்றும் ஸ்டவ் அடுப்பை தரைப்பகுதியில் வைத்து தான் சமையல் செய்யும் நிலை உள்ளது. இதன் காரணமாக தான் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

எனவே இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளிக்கு காலை உணவு சமைக்க தனியாக சமையல் கூடம் கட்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தகவலறிந்த அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Nadukkuppam panchayat ,Marakanam ,Panchayat Union Primary School ,Nadukkuppam ,Villupuram ,
× RELATED நெல்லிக்குப்பம் அருகே 9 வயது...