×

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் தேங்குவதால் சகதிக்காடாகும் அவலம்: வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி

 

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மழை காரணமாக தண்ணீர் தேங்கி சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதில் செல்ல முடியாமல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை, நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆங்காங்ேக மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மழைநீரில் தத்தளித்தபடி சென்றனர். மேலும் சாலைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். குறிப்பாக, மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் முறையான வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி மார்க்கெட் வளாகமே சேரும் சகதியுமாக மாறியுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கும் அவலம் தொடர்கதையாகி வருவதாக வியாபாரிகள் வேதனை அடைகின்றனர். மேலும் நேற்று காலை காய்கறி வாங்க வந்த சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் மார்க்கெட்டில் அடியெடுத்து வைக்க முடியாத அளவிற்கு, சகதியில் நடந்து சென்று மிகவும் அவதிப்பட்டனர். நடக்கும்போதே வழுக்கும் அளவிற்கு சகதி இருந்ததால், சிலரது இரு சக்கர வாகனங்களும் அதில் சிக்கிக்கொண்டு தொடர்ந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதேபோல் அருகில் உள்ள பூ மார்க்கெட்டிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் போல் காட்சி தருகிறது.

இது குறித்து அனைத்து சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: மழையால் மார்க்கெட் முழுக்க சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மாநகராட்சி சார்பில் தினமும் குப்பையை அள்ளுவது கிடையாது. இதனால் குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது. மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் வௌியே செல்ல வழியே இல்லை. இதனால மழைநீர் பல்வேறு பகுதிகளிலும் முழுவதுமாக தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடுமையான சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகள் உட்கார்ந்து வியாபாரம் செய்யவும் முடியாத சூழல் உள்ளது. காய்கறி வாங்க வரும் பொதுமக்களும் இந்த துர்நாற்றத்தால் நின்று காய்கறி வாங்காமல், அவசர கதியில் இங்கிருந்து அச்சத்துடன் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இதனால் பல நேரங்களில் மார்க்கெட்டில் விற்பனை பாதிக்கப்படுகிறது. எனவே மமாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை கருத்தில் எடுத்துக்கொண்டு, மார்க்கெட்டில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், சுகாதார ரீதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : Madurai Mattuthavani ,Madurai ,
× RELATED நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள்...