சின்னமனூர்: முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறக்காததால் சின்னமனூர் பகுதியில் 4000 ஏக்கர் முதல் போக நெல்சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. வறண்ட வயல்வெளிகள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் ஆண்டுதோறும் இருபோக நெல் சாகுபடி நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை தவறாமல் பெய்ததன் காரணமாக இருபோக நெல்சாகுபடி தடையின்றி நடந்து வந்தது. வழக்கமாக முதல் போக சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் 120 அடி தண்ணீர் இருந்தால், ஜூன் மாதம் முதல் வாரம் தண்ணீர் திறந்துவிடப்படும். சின்னமனூர் பகுதியைப் பொறுத்தவரை 4,000 ஆயிரம் ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடக்கும்.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கினாலும், முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லை. ஆங்காங்கே தூறல் மழை தான் பெய்து வருகிறது. பெரியாறு அணையில் இருந்து எப்படியும் தண்ணீர் திறந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் கடந்த மே மாத இறுதியில் சின்னமனூர் பகுதியில் உள்ள துரைச்சாமிபுரம், குச்சனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் நாற்றாங்கால் பாவி உள்ளனர். நாற்றுகளும் வளர்ந்து தயாராக உள்ளது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு 174 கனஅடியாகவும், நீர்மட்டம் 113.45 அடியாக உள்ளது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் தான் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும். கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் வயல்களை உழுது நடவுக்கு தயார் செய்து எப்போது மழை பெய்யும், எப்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்கள். வறண்ட வயல்வெளிகள் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. இதனால், சின்னமனூர் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளாக பருவமழை தொடர்ந்து பெய்ததால், சின்னமனூர் உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக சாகுபடி தடையில்லாமல் நடந்தது. ஆனால், நடப்பாண்டில் பருவமழை ஏமாற்றி வருவதால், பெரியாற்றின் நீர்மட்டம் உயராமல் உள்ளது.
ஜூன் மாதம் முதல் வாரம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கபடவில்லை. விவசாயிகள் வயல்வெளியையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை கருணை காட்ட வேண்டும்’ என்றனர்.
