×

திருப்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாத எஸ்கலேட்டர், பயன்பாட்டில் இல்லாத வீல் சேர்: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதி

 

*பேட்டரி கார் சேவையை எதிர்பார்க்கும் பயணிகள்

திருப்பூர்: தொழில் நகரான திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வந்து செல்லும் வணிகர்களின் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.ஆனாலும் இங்கு உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் பின் தங்கிய நிலையில் உள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் வணிக நிமித்தமாகவும்,வேலைவாய்ப்புக்காகவும் உள்ளூர் மற்றும் வெளிமாநில பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.இங்கு 1 மற்றும் 2 என மொத்தம் இரண்டு நடைமேடைகள் உள்ளன.

இதில், பெரும்பாலும் கோவை, கேரளா மார்க்கமாக செல்லும் ரயில்கள் முதலாவது நடைமேடையிலும், ஈரோடு, சேலம், சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய ரயில்கள் 2வது நடைமேடையிலும் நிறுத்தப்பட்டு இயக்கப்படுகின்றன. முதலாவது நடைமேடைக்கு பிரதான நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகள் 2வது நடைமேடைக்கு செல்ல வேண்டுமானால் மேம்பால படிக்கட்டுகளைத்தான் முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இந்த படிக்கட்டுகளில் ஏறி, அடுத்த நடைமேடைக்கு செல்வதற்குள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.

பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலான நாட்களில் பயன்பாட்டில் இருப்பதில்லை. பராமரிப்பு பணி அல்லது பிற காரணங்களால் இவை இயங்காமல் இருப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால், மாற்றுத்திறனாளிகளும், முதியவர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாவது உண்டு. சேலம் கோட்டத்திலேயே அதிக வருவாய் ஈட்டித்தரும் முக்கிய நிலையங்களில் ஒன்றான திருப்பூரில் இன்னும் அதிகாரப்பூர்வமாக பேட்டரி கார் வசதி செயல்பாட்டுக்கு வரவில்லை.

ஒன்றிய அரசின் அமிர்த் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருப்பூரில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலையத்தின் முகப்பை அழகுபடுத்துவதற்கு தரும் முக்கியத்துவத்தை, பயணிகளின் இத்தகைய அடிப்படை வசதிகளுக்கும் தர வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர். இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘திருப்பூர் ரயில் நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள்,முதியவர்கள் வந்து செல்வது மிக சிரமம்.

லிப்ட்,எஸ்கலேட்டர் பெரும்பாலான நேரங்களில் செயல்பாட்டில் இருப்பதில்லை. இதனை கண்காணித்து 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதோடு, பணியாளர்களுடன் கூடிய பேட்டரி கார் சேவையை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். நடைமேடைகளின் நுழைவாயிலிலேயே சக்கர நாற்காலிகள் எளிதாக கிடைக்கும் வகையில் பிரத்யேக உதவி மையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Tiruppur ,
× RELATED வெள்ளோடு அருகே சாலையோரம் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட அதிசய காளான்