×

அமராவதி அணையை தூர் வாராததால் 3 போக சாகுபடி ஒரு போகமாக குறைந்தது

 

உடுமலை: அமராவதி அணையை தூர் வாராததால் 3 போக சாகுபடி ஒரு போகமாக குறைந்தது என விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது அமராவதி அணை. 1953ம் ஆண்டு டிசம்பரில் அப்போதைய தமிழக முதல்வர் ராஜாஜி அடிக்கல் நாட்டினார். 5 ஆண்டு கட்டுமான பணி முடிந்து, 1958ல் தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அணையை திறந்து வைத்தார். 1959ல் முதன்முதலாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அணையின் மொத்த நீர் கொள்ளளவு 4 டிஎம்சி. கூட்டாறு, வால்பாறை அக்காமலை பகுதியில் உள்ள சின்னாறு, தேனாறு, கேரளாவின் பாம்பாறு ஆகியவற்றில் இருந்து வரும் தண்ணீர் தூவானம் அருவியில் பெருக்கெடுத்து அமராவதி அணைக்கு வந்து சேர்கிறது.இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டத்தில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர, நேரடி பாசனம் எனப்படும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 3,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தில் அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

அமராவதி அணையை நம்பி 10,500 ஏக்கரில் நெல்லும்,12 ஆயிரம் ஏக்கரில் கரும்பும் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிக பரப்பளவில் தென்னை சாகுபடி நடக்கிறது. மக்காச்சோளம், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் பயிர் செய்யப்படுகிறது. அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. அமராவதி அணை கட்டிய பிறகு 1980ல் தூர் வாரப்பட்டது. அதன்பிறகு 45 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. இதனால், அணையில் பெருமளவு வண்டல் மண் படிந்து கிடக்கிறது. இதன்காரணமாக 4 டிஎம்சி கொள்ளளவுக்கு பதில் தற்போது, 3 டிஎம்சி மட்டுமே தேக்க முடியும். ஒரு டிஎம்சி நீர் வீணாக வெளியேறி விடும்.

இதனால், ஆரம்பத்தில் 3 போகம் நெல் பயிரிட்டு வந்த விவசாயிகள் 2 போகமாக குறைத்து தற்போது ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். கரும்பு சாகுபடி பரப்பும் கணிசமாக அளவு குறைந்து விட்டது. எனவே, அரசு நிதி ஒதுக்கி அமராவதி அணையை தூர் வார வேண்டும். நிதி ஒதுக்காத பட்சத்தில் விவசாயிகளே தூர் வார அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Amaravathi Dam ,Udumalai ,Tiruppur district ,
× RELATED வெள்ளோடு அருகே சாலையோரம் முளைத்திருந்த 2.6 கிலோ எடை கொண்ட அதிசய காளான்