×

சென்னையில் இன்று 3வது ஒருநாள் போட்டி; ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா: ஆறுதல் வெற்றிக்கு ஆப்கான் ஆசை

 

சென்னை: இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடிய டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகின்றன. தர்மசாலாவில் நடந்த முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா, அடுத்து லக்னோவில் நடந்த 2வது போட்டியிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 170 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை வசப்படுத்தியது.

ஆப்கான் பந்துவீச்சை சிதறடித்த கேப்டன் கில் 154 ரன், இஷான் கிஷன் 125 ரன் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தனர். பந்துவீச்சில் அர்ஷ்தீப், பிரார், பிரின்ஸ், வாஷிங்டன் விக்கெட் வேட்டை நடத்த, ஆப்கானிஸ்தான் எதிர்ப்பின்றி சரணடைந்தது. இந்தியா 2-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்த போட்டியிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வரிந்துகட்டுகிறது.

முழங்கால் மூட்டு காயம் காரணமாக டி20 உலக கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடாத ஹர்ஷித் ராணா, இப்போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனைத்து வகையிலும் பலம் வாய்ந்த அணியாகத் திகழும் இந்தியா, சேப்பாக்கத்தில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்துமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே சமயம், தொடரை ஏற்கனவே இழந்துவிட்ட ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பும் ஆசையுடன் களமிறங்குவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags : Chennai ,India ,Afghanistan ,Dharamsala… ,
× RELATED இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; 2வது...