உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தங்களுடன் மேகதாது பிரச்னையில் அரசினர் தனி தீர்மானம்: அனைத்துக் கட்சி ஆதரவுடன் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது

 

சென்னை: எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தங்களுடன் மேகதாது பிரச்னை தொடர்பாக முதல்வர் விஜய் பேரவையில் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 9.30 மணிக்கு கூடியதும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர் மற்றும் திரை பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதற்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

அப்போது அவர் பேசியதாவது: காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதி தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியை பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது. கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரி பிரச்னை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்னையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வளக் குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது. கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார். தீர்மானத்தின் மீது அமைச்சர்கள் ராஜேஷ்குமார் (காங்கிரஸ்), வன்னி அரசு (விசிக) மற்றும் தமிமுன் அன்சாரி (மஜக), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நித்தியானந்தன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக), பிரேமலதா (தேமுதிக), சவுமியா (பாமக), செல்லசாமி (மார்க்சிஸ்ட்), ராஜேந்திரன் (மதிமுக), எடப்பாடி பழனிசாமி (அதிமுக) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திமுகவின் உறுதியான நிலைப்பாடு ஆகும். காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்னை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவந்த பிறகு 4.3.2026 அன்று அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசு செயலாளர் ஒன்றிய ஜல்சக்தி துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்னை ஒரு புதிய விவாதம் என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தை சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எதிர்கட்சித் தலைவர் பேசும்போது இந்த தனித் தீர்மானத்தில் கூடுதலாக ஒன்றைச் சேர்க்க வேண்டும் என்று சொன்னதை இந்த அரசு ஏற்றுக் கொள்கிறது. மேகதாது பிரச்னையில் தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து 26.5.2026 அன்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது, அதன்படி, தனி நடுவர் மன்றம் அமைக்க் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் நான் முன்மொழிந்த தீர்மானத்தின் நான்காவது பத்திக்கு அடுத்த பத்தியில் அதைச் சேர்த்து தீர்மானத்தை நிறைவேற்றித்தர வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: முதல்வர் கொண்டு வந்த திருத்திய தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது. ஆதரிப்போர் ஆம் என்க; மறுப்போர் இல்லை என்க என்றார். (அனைவரும் ஒருமித்த குரலில் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.) தீர்மானத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுகிறது.

டெல்டா பாலைவனமாக மாறிவிடும்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக நேறடறு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானத்தின் மீது, சவுமியா அன்புமணி (பாமக) பேசியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையின் தலைக்காவிரியில் தொடங்கி, வங்காள விரிகுடாவில் கலக்கும் வரை காவிரி ஆறு கிட்டத்தட்ட 800 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. இதில் கர்நாடகாவில் 320 கிலோமீட்டரும், இரு மாநில எல்லைப் பகுதியில் 60 கிலோமீட்டரும் பாயும் காவிரி, தமிழகத்தில் தான் 420 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. அதனால் அதிகமான உரிமை நமக்குத்தான் இருகிறது. ஆனால், நமக்கு வரும் தண்ணீரை குறைத்துள்ளார்கள்.

இப்போது 177 டிஎம்சி தண்ணீர்தான் வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடைமடை மாநிலத்தின் அனுமதி இல்லாமல் எந்த அணையும் கட்ட முடியாது. ஒருவேளை அவர்கள் மேகதாதுவில் அணை கட்டினால் நமக்கு வரவேண்டிய நீர் வராது. டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். இந்த ஆண்டு தண்ணீர் இல்லாததால், மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஒருவேளை மேகதாது அணை கட்டப்பட்டால் குடிநீருக்குக்கூட தண்ணீர் இருக்காது. அதனால், மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை பாமக முழுமனதாக வரவேற்று ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நதிகளை இணைக்க வேண்டும்
பிரேமலதா (தேமுதிக) பேசியதாவது: தமிழ்நாட்டுக்கு முக்கியமான இந்த தீர்மானத்தை யாரும் எதிர்க்க போவதில்லை. அனைவரும் ஒன்றாகத்தான் இருப்போம். தேமுதிக இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது. ஆனால், சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்து மீனவர்கள் பிரச்னை, காவிரி நதி நீர்ப் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். தமிழ்நாடு மக்களின் உரிமையை நாம் ஒவ்வொரு முறையும் சுற்றியுள்ள மாநிலங்களை கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும்.

இதுவரை முதல்வராக இருந்த ஜெயலலிதா, கலைஞர், மு.க.ஸ்டாலின் என அனைவரும் காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். தாய்ப்பால் போல் தண்ணீர் முக்கியமானது. நீரின்றி அமையாது உலகு. எனவே, மின்மிகை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியதைப் போல், நீர் மேலாண்மையை நாம் உருவாக்க வேண்டும். இனிவரும் மழைக்காலத்துக்கு முன்னதாக நீர் மேலாண்மையை பற்றி யோசிக்க வேண்டும். தமிழகத்தில் எங்கெல்லாம் நதிகளை இணைக்க முடியுமோ, அதைச் செய்ய வேண்டும். அனைத்துப் பகுதிகளையும் தூர்வார வேண்டும். மழை நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: