லக்னோ: அயோத்தி ராமர் கோயில் நிதி முறைகேடு விவகாரத்தில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை பணம் திருட்டு, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிதி நிர்வாகத்தில் குளறுபடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க 3 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மாநில பாஜ அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் கலந்து கொண்டார். அப்போது பேசிய யோகி ஆதித்ய நாத், “ராமர் கோயில் நிதி முறைகேடு பற்றி விசாரிக்க ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கோரிக்கையை ஏற்று சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளோம். இந்த முறைகேடு தொடர்பாக யாரிடமாவது ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அதை சிறப்பு புலனாய்வு குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
சிறப்பு புலனாய்வு குழுவினர் முழு உண்மையை வெளியே கொண்டு வருவார்கள்.அயோத்தி முக்கியத்துவம் பெறுவதையோ, அதற்குரிய கவுரவம் கிடைப்பதையோ சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சியினர் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். இவர்கள்தான் ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள், ஜெய் ராம் முழக்கமிட்டவர்கள் மேல் தடியடி நடத்தியவர்கள். பகவான் ராமரின் இருப்பு குறித்தே கேள்விக்குள்ளாக்கியவர்கள். கோயிலுக்கே வராதவர்கள் தற்போது ராமர் பக்தி பற்றி பேசுகிறார்கள்” என குற்றம்சாட்டினார்.
