மும்பை: திரையுலகில் நுழைய முயன்ற போது தனக்கு நடந்த பாலியல் ரீதியான கசப்பான அனுபவங்களை நடிகை மான்வி காக்ரு வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நடக்கும் அத்துமீறல்கள் குறித்து நடிகை மான்வி காக்ரு ‘டூ கேர்ள்ஸ் அண்ட் டூ கப்ஸ்’ என்ற இணைய நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், ‘எனது திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் எனக்கு செல்போன் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய ஒப்புக்கொண்டால் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் ‘காம்ப்ரமைஸ்’ என்ற வார்த்தைக்கு சம்பளம் குறைப்பு அல்லது வரி தொடர்பான விஷயம் என்று தான் புரிந்துகொண்டேன்.
பின்பு எனது வழிகாட்டியாக இருந்த ஒரு காஸ்டிங் டைரக்டரிடம் விளக்கம் போது தான், ‘அட்ஜஸ்ட்மென்ட்’, ‘காம்ப்ரமைஸ்’ என்ற வார்த்தைகளின் பின்னால் இருந்த பாலியல் விருப்பங்கள் இருப்பது தெரியவந்தது. பொதுவாக இதுபோன்ற விஷயங்களில் ஆதாரங்கள் இருக்கக்கூடாது என்பதற்காக செல்போனில் தான் பேசுவார்கள், ஆனால் எனக்கு 1 லட்சம் ரூபாய் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் என்று எழுத்துப்பூர்வமாகவே மெசேஜ் வந்தது என்னை வியக்க வைத்தது. சினிமா பின்புலம் கொண்ட வாரிசுகளுக்கு வாய்ப்புகள் எளிதாக கிடைக்கிறது.
அவர்களுக்கு திரைத்துறையில் பெரிய வலைப்பின்னல் இருக்கிறது. ஆனால், சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஒரு வாய்ப்புக்காகவும், நடிப்பு தேர்வுக்காகவும் 100 சதவீதம் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. இருந்தபோதும், தற்காலத்தில் ரசிகர்கள் தான் யார் திரையில் நிலைக்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறார்கள். வாரிசு அடிப்படையில் வராத சினிமா நட்சத்திரங்களுக்கு இதுபோன்ற பிரச்னைகளை கையாள்வது எளிதல்ல, இறுதியில் திறமை மட்டுமே ஒருவரை நிலைநிறுத்தும்’ என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
