முத்துக்கள் முப்பது-தெய்வீக மணம் கமழும் பிரசாதங்களின் மகிமை!

1. முன்னுரை

பழனி சென்று வந்த நண்பரிடம் நாம் முதலில் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா? சுவாமியைப் பார்த்தீர்களா என்பதைவிட பஞ்சாமிர்தம் கொண்டு வந்தீர்களா என்றுதான் கேட்போம். திருப்பதிக்குச் சென்று வரும் நண்பர்களிடம், “எங்கே லட்டு?’’ என்றுதான் கேட்போம். ஒரு ஆலயத்தின் சிறப்பை மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றையெல்லாம் வைத்து தீர்மானிக்கின்ற ஆகம விதிகள் இருந்தாலும், சாதாரண மக்கள் அந்தந்த ஆலயங்களின் சிறப்பான பிரசாதங்களின் பெயரைச் சொல்லி அந்த ஆலயத்தை நினைவு கொள்ளுதல் என்னும் பழக்கம் பல்லாண்டுகளாக இருக்கிறது. இந்த இதழில் முக்கியமான சில ஆலயங்களில் என்ன பிரசாதம்? என்ன சிறப்பு? என்பதை முப்பது முத்துக்களாகப் பார்ப்போம்.

2. வாழ்க்கையின் பிரதிபலிப்பு

ஆலய வழிபாடுகளில் தெய்வங்களுக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள் நம்முடைய அன்றாட மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை பிரதிபலிப்பதாக இருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம், ஒழுக்கம், மன அமைதி போன்ற வாழ்வியல் நெறிமுறைகளை பிரதிபலிப்பதாகவே ஆலய வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அதிகாலை கோயில் நடைதிறந்து திருப்பள்ளி எழுச்சி பாடுதல், பசு, கண்ணாடி முதலிய மங்கலப் பொருள்களை காட்டுதல், திருவடி விளக்குதல் (பாத்யம்) திருக்கைகள் விளக்குதல் (அர்க்யம்) திருவாய் விளக்குதல் (ஆசமநீயம்) நீராட்டம் அமைத்து வைத்தல் (ஸ்னானம்) அலங்காரங்கள் செய்தல், மலர்கள் சூட்டி தூப தீபங்கள் காட்டுதல், நிவேதனங்கள் சமர்ப்பித்தல் என்று வரிசையாக ஆலய வழிபாட்டு முறைகளை கவனித்தால் நம்முடைய வாழ்க்கை முறையை பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

3. ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு நிவேதனம்

அதிகாலையாகிய உஷத்காலம் அதாவது நடைதிறப்பு தொடங்கி, இரவு அர்த்த ஜாமம் (நடை சாற்றுதல்) வரை வரிசையாக பூஜைகள் அந்தந்த கால இடைவெளியிலே (கால சாந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம்) நடைபெறுகின்றன. ஒவ்வொரு பூஜைக்கும் ஒவ்வொரு விதமான நிவேதனங்கள் (பிரசாதங்கள்) படைக்கப்படுகின்றன. என்னென்ன நிவேதனங்கள், எந்தெந்த மூர்த்திக்கு, எந்தெந்த கோயிலிலே, எப்படிப் படைக்க வேண்டும் என்று அந்தந்த கோயில்களுக்கு உரிய நூல்களிலே (தலபுராணம், அல்லது பூஜை விதிகள்) எழுதப்பட்டிருக்கின்றன.

4. வாழ்வியல் பண்பாடுகளின் அங்கம்

பிரசாதங்கள் நம்முடைய வாழ்வியல் பண்பாடுகளின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இன்ன விரத முடிவில் இன்ன பிரசாதத்தைப் படைக்க வேண்டும். அதைப் போலவே இந்தந்த பண்டிகைகளில், இந்தந்த உற்சவங்களில் இந்த பிரசாதத்தைப் படைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். உபவாசம் இருப்பது போலவே அதாவது உண்ணாமல் இருப்பது போலவே உண்ணும் போது எந்தெந்த பிரசாதங்களை உண்ண வேண்டும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள். எனவே பூஜை வழிபாடு, பிரசாதம் என்பதெல்லாம் நம்முடைய வாழ்வியலோடு கலந்ததாகவே இருக்கிறது. ஏன்… நம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் ஏதோ ஒரு விதத்தில் நமக்குத் துணையாக இருக்கின்றன.

5. உணவே மருந்து தத்துவம்

இன்றைக்கு ஆரோக்கியத்தில் சமச்சீர் உணவு என்று சொல்கிறார்கள். ஆனால் ஆலயங்களில் இந்த சமச்சீர் சத்துக்கள் நிரம்பிய பிரசாதங்களைத்தான் பக்தர்களுக்கும் தருகிறார்கள்.. துளசி தீர்த்தம், பழங்களின் கலவையான பஞ்சாமிர்தம், துளசி, வாழைப்பழம், கல்கண்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, சுண்டல், வெண்பொங்கல், கேசரி, தயிர் சாதம், பானகம், வடை, அம்மன் கோயில்களில் கூழ் என பிரசாதங்கள் வரிசையை யோசித்துப் பாருங்கள். அந்தந்த காலத்துக்கு ஏற்ற மாதிரியும், ஆரோக்கியம் தருவது போலவும் பிரசாதங்கள் அமைந்திருக்கும்.

6. சங்க நூல்களில் பிரசாதங்கள்

சங்க நூல்களில் `பிரசாதம்’ என்ற சொல் நேரடியாகக் கடவுளுக்குப் படைக்கப்படும் உணவாகக் கூறப்படவில்லை. எனினும், அக்காலத்தில் இறைவனுக்குப் படைக்கப்பட்ட உணவுகள் “படையலுணா’’ அல்லது “கடவுளுணா’’ என்று அழைக்கப்பட்டன. மரங்கள், மலைகள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு மலர்களைப் படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. கடவுளுக்குப் படைத்த உணவைச் சான்றோர்கள், முதியவர்கள், மற்றும் வழிப்போக்கர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மாண்பு சங்க நூல்களில் போற்றப்படுகிறது. சமணம் போன்ற மதங்களின் வழிபாட்டு முறைகளில் தூய்மையான உணவுப் பழக்கங்கள் இருந்ததை மதுரைக்காஞ்சி போன்ற நூல்கள் விவரிக்கின்றன. சாத்வீகமான தெய்வங்களுக்கு சாத்வீகமான பிரசாதங்களையும், உக்கிரமான தெய்வங்களுக்கு அதற்கேற்றவாறு பிரசாதங்களையும் படைக்கும் மரபு தொன்று தொட்டு இருக்கிறது.

7. தினை மாவு

மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளிலும்கூட இறைவனுக்கு படைக்கப்படும் நிவேதனங்கள் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் ஒட்டியதாகவே இருக்கிறது. உதாரணமாக பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்ப்போம்.

“உனக்குப் பணிசெய் திருக்கும் தவமுடை யேன் இனிப் போய் ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலை நிற்கை நின் சாயை யழிவு கண்டாய்
புனத்தினை கிள்ளிப் புது அவி காட்டி உன் பொன்னடி வாழ்க வென்று
இனக் குற வர் புதிய துண்ணும் எழில் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்’’

முதல் இரண்டு வரிகள் “பகவானே, உன்னுடைய தொண்டனாகிய நான் வேறு ஒருவருக்கும் தொண்டு செய்ய மாட்டேன்’’ என்பதைச் சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலை மலையிலே (குறிஞ்சி நிலம்) வாழுகின்ற, பழங்குடியின வேடுவர்களிடமிருந்து பூஜை முறைகளைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் தாங்கள் உண்ணும் அதே உணவை உனக்குப் படைக்கிறார்கள். தினைக் கதிர்களை அறுத்து, மாவாக்கி, உனக்கு நிவேதனமாகக் காட்டி அதன் பிறகுதான் தாங்கள் உண்கிறார்கள். இதிலிருந்து அந்த காலத்து மக்கள், தாங்கள் உண்ணும் உணவை இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு, அதை பிரசாதமாக உண்ணுகின்ற வழக்கம் இருந்தது என்பது தெரிகிறது.

8. வடைமாலை யாருக்கு?

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் நிவேதிக்கப்படுகின்றன. பஞ்சாமிர்தம் என்றால் பழனி நினைவுக்கு வருவது போல, ஒரு பிரசாதத்தைச் சொன்னால் அதற்கு தொடர்புடைய தெய்வத்தின் பெயரும் நமக்கு நினைவுக்கு வரும். வடை மாலை என்றால் ஆஞ்சநேயர் நினைவுக்கு வந்துவிடுவார். ஆடிக் கூழ் என்றால் அம்மன் நினைவுக்கு வந்து விடுவார். வெண்ணெய் என்றால் கண்ணன் நினைவுக்கு வந்துவிடுவார். பானகம் என்றால் நரசிம்மர் நினைவுக்கு வந்துவிடுவார். கொழுக்கட்டை என்றால் விநாயகர் நினைவுக்கு வந்து விடுவார். பிரசாதங்களைப் பற்றிய குறிப்பு ஆகமங்களின் மட்டும் அல்ல ஆழ்வார்கள் பாசுரங்களிலும் நாயன்மார்களின் தேவாரங்களிலும் அருணகிரிநாதரின் திருப்புகழ் முதலிய நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

9. விநாயருக்கு படைக்கப்படும் பிரசாதங்கள்

விநாயகருக்கு என்னென்ன பிரசாதங்கள் எல்லாம் படைக்கப்படுகின்றன என்பதை அருணகிரிநாதரின் இந்த திருப்புகழ் நமக்கு அற்புதமாக உணர்த்துகிறது. “கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுக னடிபேணி’’ என்ற திருப்புகழில், சுவையான பழங்கள், அப்பம், அவல், பொரி முதலிய விநாயகர் பிரசாத வரிசையாக குறிப்பிடுகிறார். ஒளவையார் தம்முடைய பிரார்த்தனையில், இந்த பிரசாதங்களை எல்லாம் உனக்குத் தருகின்றேன். நீ எனக்கு சங்கத் தமிழை தா.. என்று கேட்கிறார்.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந்தா’’

10. ஆழ்வார் பாசுரங்களில் பிரசாதங்கள்

ஆழ்வார் பாசுரங்களில் இறைவனுக்குப் படைக்கப்படும் பிரசாதங்கள், அவற்றின் செய்முறைகள் மற்றும் அடியார்களின் பெருமைகள் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளன. பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோரால் மிகவும் போற்றப்பட்ட பிரசாதம் “அக்கார அடிசில்’’ ஆகும். செந்நெல் அரிசி, சிறுபருப்பு, பசுவின் பால் மற்றும் நறுநெய் சேர்த்துச் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கல் போன்றதாகும். ஆண்டாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகருக்கு நூறு தடா (குடங்கள்) அக்கார அடிசிலும், அதே அளவு வெண்ணெயும் படைப்பதாக நேர்த்திக்கடன் செய்தார். இந்த வேண்டுதலைப் பிற்காலத்தில் ஸ்ரீ ராமானுஜர் நிறைவேற்றி வைத்தார். பெரியாழ்வார் திருமொழியில், கண்ணனை அமுதுண்ண அழைக்கும்போது “அப்பம் கலந்த சிற்றுண்டி, அக்காரம் பாலில் கலந்து’’ சுட்டு வைத்துள்ளதாகப் பாடியுள்ளார்.

11. வெறும் சாதமல்ல; பிரசாதம்

இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி வரலாம். வீட்டிலும் சரி, கோயில்களிலும் சரி, விதவிதமான பிரசாதங்களைச் செய்து இறைவனுக்கு படைக்கிறோமே, இறைவன் உண்மையில் இவற்றை ஏற்றுக் கொள்கிறானா? சாப்பிடுகிறானா? பிறகு ஏன் படைக்க வேண்டும்? என்கின்ற கேள்வி எழலாம். இறைவனுக்கு பிரசாதம் சமர்ப்பிப்பதின் பின்னணியில் ஓர் ஆழமான ஆன்மிக தத்துவ அறிவியல் இருக்கிறது. குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு இயல்பாக குழந்தையினுடைய உணவாகிய பால் சுரப்பது போல, உயிர்களைப் படைக்கும் பொழுதே, உயிர்களுக்கான உணவையும் இறைவன் படைத்திருக்கிறான். ஆறறிவு படைத்த நம்மால் ஒரு நெல் மணியைக் கூட உருவாக்க முடியாது. காற்றை உருவாக்க முடியாது. தண்ணீரை உருவாக்க முடியாது.

ஆனால், இதையெல்லாம் நமக்கு உருவாக்கிக் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக உணவைப் படைக்கிறோம். நாம் எந்த நன்றி உணர்வும் இல்லாமல் உணவைச் சாப்பிடுகின்ற பொழுது, அது சாதம். இறைவனுக்கு கண்டருளச் செய்துவிட்டு, “உன்னால்தான் எனக்கு இந்த உணவு கிடைத்தது’’ என்ற நன்றி உணர்வோடு சாப்பிடுகின்ற பொழுது, அது பிரசாதம். ஆலயங்களில் தரப்படுவது வெறும் சாதமல்ல; பிரசாதம்.

12. ஒரு இலை, ஒரு பழம் போதும்

பகவத் கீதையின் பகவான் கண்ணன், யார் ஒருவர் எனக்கு ஒரு இலையோ பூவோ பழமோ அர்ப்பணிப்போடு சமர்ப்பிக்கிறார்களோ, அதனை நான் முழு மனதோடு ஏற்றுக் கொள்கின்றேன் என்கிறான்.

“பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்தி – உபஹ்ருதம் அஸ்நாமி ப்ரதத் – ஆத்மன’’ (9:26)
– என்பது அந்த ஸ்லோகம்.

இறைவன், நம்மிடத்தில் விதவிதமான நிவேதனங்களையோ மற்ற பொருட்களையோ எதிர்பார்க்கவில்லை. அந்தப் பொருள்களின் பின்னணிகள் உள்ள அன்பையும் பக்தியையும் மட்டுமே எதிர்பார்க்கின்றான். வசதி உள்ளவர்கள் பலவிதமான பொருட்களைக் சமர்ப்பிக்கிறார்கள். இல்லாதவர்கள் மானசீகமாக (மனதளவில்) சமர்ப்பிக்கிறார்கள். மானசீகமான அந்த சமர்ப்பணத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்கின்றான்.

13. சுவையில் வேறுபாடு

ஆலயங்களிலும் வீட்டிலும் நாம் படைக்கும் நிவேதனங்களை இறைவன் சூட்சுமமாகவும் சில நேரங்களில் நேராகவும் அங்கீகரிக்கிறான். பொதுவாக நிவேதனத்தை இறைவன் முன்னால் வைத்து நாம் கண்டருளச் செய்கின்றோம். இறைவன் தன்னுடைய சிறப்பான பார்வையினால் அந்தப் படையலை சூட்சுமமாக ஏற்றுக் கொள்ளுகின்றான். இதை நீங்களே அனுபவத்தில் அறியலாம். நீங்கள் கொஞ்சம் பொங்கலை, ஒரு சிறு பாத்திரத்தில் இறைவனுக்குப் படையுங்கள். மீதிப் பாத்திரத்தில் பொங்கல் இருக்கட்டும். இப்பொழுது அன்பாக படைத்த பொங்கலைச் சாப்பிட்டுப் பாருங்கள். வெளியே பாத்திரத்தில் உள்ள பொங்கலைச் சாப்பிட்டுப்பாருங்கள். இரண்டின் சுவையிலும் வித்தியாசம் தெரியும்.

14. அமுது படையல்

பூஜையின் போது படையலை பகவான் திருக்கண்களால் கண்டருள்வார். அதனால் பிரசாதங்களைச் சமர்ப்பிக்கும் போது, திரை போடுவார்கள். அப்போது பகவான், பார்வையை அமிர்தப் பார்வை என்று சொல்வார்கள். வைணவ மரபில் இதை ஒட்டித்தான் நிவேதனங்களை அமுதம் என்கின்ற சொல்லோடு இணைத்துச் சொல்வார்கள். தயிர் அமுது, வடை அமுது, கறியமுது, சாற்றமுது, திருக்கண்ணமுது என்று சொல்லும் வழக்கம் இருக்கின்றது. அமுதம் உயிரைக் காக்கும் இறைவனுக்கு படைக்கப்பட்ட அமிர்தமயமான பிரசாதமானது நம்முடைய உடலையும் உள்ளத்தையும் காக்கும்.

15 திருவரங்கத்தில் பெரிய அவசரம்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வில் ஒரு சம்பவம். அவர் அரங்கனுக்கு பல்வேறு விதமான பிரசாதங்களைப் பார்த்து பார்த்து ஒவ்வொரு வேளை பூஜைக்கும் அனுப்புவார். உலகம் கொண்ட பெருவாயன் அல்லவா..! ஆகையினால், அவனுக்கு படைக்கும் படையல்கள் பிரம்மாண்டமாக இருக்கும். திருவரங்கத்தில் எல்லாம் பெரிது என்பார்கள். பெரிய அவசரம், பெரிய தளிகை என்றெல்லாம் சொல்வார்கள். அதென்ன பெரிய அவசரம் என்று கேட்கலாம். சுத்தான்னம்: பதினெட்டு படி தளிகை (வெள்ளை சாதம்). தக்காளி சேர்க்காமல் புளி, மிளகு, சீரகம் இட்ட ரசம், பாசிப்பருப்பு கறியமுது மற்றும் காய்கறி கூட்டு, அரிசி, பாசிப்பருப்பு, பால் மற்றும் வெல்லம் சேர்ந்த பாயசம். பதினோன்று பெரிய அதிரசங்கள் எல்லாம் சேர்ந்தது பெரிய அவசரம்.

புது மண் பாத்திரத்தில் விதவிதமான படையல்களை அனுப்புவார்கள். அந்த பிரசாதத்தை இறைவனுக்கு படைத்துவிட்டு, திரும்ப வரும் பொழுது, ராமானுஜர் திறந்து பார்ப்பாராம். அர்ச்சகர்கள் நாம், பிரசாதத்தை கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை எடுத்துச் செல்கிறோம் என்று ராமானுஜர் சந்தேகப்படுகிறாரோ என்று நினைத்தார்களாம். அப்பொழுது ராமானுஜர் அவர்களிடம் சொன்னாராம். ஏதோ ஒரு விதத்திலே எம்பெருமான் வெளிப்படையாகத் தன்னுடைய திருக்கையால் இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொண்ட நகக்குறியாவது பிரசாதத்தில் விழுந்திருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காகத் தான் நான் இப்படிச் செய்கிறேன் என்பாராம்.

16. நேரடியாக பகவான் சாப்பிட்டார்

சில அருளாளர்கள் விஷயத்தில் இறைவன் நேரடியாகவே பிரசாதங்களை ஏற்றுக் கொண்ட வரலாறுகளும் உண்டு. நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெருமகனார் திருநாரையூர் என்ற திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவருடைய தந்தை அங்குள்ள பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அவர் ஒரு நாள் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், தன்னுடைய குமாரனிடம் பூஜை செய்து வா என்று அனுப்பி வைத்தார். பிள்ளையாருக்குப் படைக்க வேண்டிய பிரசாதங்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்று பிள்ளையார் முன்வைத்து இதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நம்பி. சின்ன குழந்தை. இறைவன் நிஜமாகவே சாப்பிடுவார் என்பதால், பிள்ளையார் முன் அழுது கொண்டே, நீ சாப்பிடாவிட்டால் நானும் சாப்பிட மாட்டேன்.

என்னுடைய தந்தையார் கொடுத்ததைச் சாப்பிட்ட நீ, நான் கொடுத்ததைச் சாப்பிட மாட்டாயா? என்றெல்லாம் கேட்க, குழந்தையின் அளப்பரிய அன்பினால் ஆனந்தப்பட்ட பிள்ளையார், அந்த பிரசாதங்களை உட்கொண்டாராம்? வெறும் பாத்திரத்தோடு குழந்தை வீடு திரும்பியபோது, அவருடைய அன்னையார் உட்பட யாருமே நம்பவில்லையாம். அடுத்த நாள் இவர் கூடவே சென்று பார்த்த பொழுது, நிஜமாகவே பிள்ளையார் தன்னுடைய பக்தனுக்காக பிரசாதனைகளை ஏற்றுக் கொண்டதைப் பார்த்தார்களாம்.

17. தயிர் சாதம், மாவடு

ஸ்ரீ ரங்கத்திலே ரங்கன் என்ற பெயரோடு ஜீயர்புரத்திலே ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். குருகுலத்தில் பயின்று வந்தான். ஒரு நாள் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிய பொழுது, பாட்டியிடம் “நான் காவேரிக்குச் சென்று குளித்துவிட்டு வருகிறேன். நீ எனக்கு உணவு தயார் செய்துவை’’ என்று சொல்லிவிட்டுச் சென்றான். வெகுநேரம் பையன் திரும்பவில்லை. பாட்டி பதற்றத்தோடு “பேரன் திரும்பவில்லையே, சாப்பாடு தயார் செய்து வைத்து காத்திருக்கிறேனே, பசியோடு இருப்பானே’’ என்று எண்ணி, ரங்கனை “ரங்கா.. ரங்கா..’’ என்று அழைத்த பொழுது, இதோ வந்துவிட்டேன் பாட்டி என்று சொல்லி ரங்கன் வந்து தயிர்சாதம் மாவடு இரண்டையும் சாப்பிட்டுவிட்டு பிரமாதம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

கொஞ்ச நேரம் கழித்து, மறுபடியும் ரங்கன் வந்து “பாட்டி பசிக்கிறது’’ என்று கேட்க, இப்பொழுது தானப்பா சாப்பிட்டாய், மறுபடியும் என்ன பசி? என்று பாட்டி கேட்க, “நான் எங்கே சாப்பிட்டேன், இப்பொழுது தானே வருகிறேன் நீ எந்த ரங்கனுக்குச் சோறு போட்டாய்?’’ என்று கேட்கும் பொழுதுதான் பாட்டிக்கு புரிந்ததாம். “அந்த ரங்கனே அந்தரங்கமாக வந்து இந்த உணவுகளை எல்லாம் சாப்பிட்டு இருக்கிறான். ரங்கா என்று கூப்பிட்ட குரலுக்கு அவன் செவி சாய்த்து இருக்கிறான் என்று பாட்டிக்கு புரிந்ததாம். இந்த வரலாற்றின் அடிப்படையில் இன்றைக்கும் ஜீயர்புரம் என்கின்ற திருச்சிக்கு அருகாமையில் உள்ள ஊரிலே மண்டகப்படிக்கு ரங்கநாதப் பெருமாள் செல்லுகின்ற பொழுது தயிர்சாதம் மாவடு இரண்டும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.

18. நடாதூர் அம்மாள்

நடாதூர் அம்மாள் என்பவர் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சாரியார். இயற்பெயர் வரதராஜன். இறைவனிடம் கொண்ட பாசத்தால், பெருமாளே இவரை “அம்மா’’ என அழைத்த காரணத்தினால் இப்பெயர் நிலைத்தது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் சந்நதியில் கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார். அப்போது மடைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர், அவசரத்தில் பெருமாளுக்கு நிவேதனம் செய்ய சூடான பாலைக் கொண்டு வந்து கொடுத்தார்.

அர்ச்சகரும் சூடான பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்ய ஆயத்தம் செய்தார். இதைக்கண்டு பதறிய வரதராஜன், அர்ச்சகரிடம் “கொதிக்க கொதிக்க பாலை பெருமாளுக்கு நிவேதனம் செய்கிறீரே. சூடான பாலைப் பருகினால் வரதராஜப் பெருமாளின் நாக்கு வெந்து விடாதா?” என்று கோபித்தவாறு அர்ச்சகரிடமிருந்து பாலை வாங்கி பதமாக ஆற்றி மிதமான சூட்டில் பெருமாளுக்கு ஒரு தாயின் பாசத்தோடு நிவேதனம் செய்தார்.

19. பானக நரசிம்மர்

ஆந்திராவில் பானக நரசிம்மர் என்று ஒரு நரசிம்மர் இருக்கிறார். ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுயம்பு நரசிம்மருக்குப் படைக்கப்படும் பானகத்தில் பாதியை சுவாமி அருந்திவிட்டு, மீதியை பக்தர்களுக்கு பிரசாதமாகத் அளிப்பது இன்றளவும் நிகழும் அதிசயம்.

அய்யம் பேட்டையில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் உள்ள லட்சுமி நரசிம்மரை வணங்கச் சென்ற வேங்கடசூரி என்ற சிறுவன், சமர்ப்பித்த பாலை நரசிம்மர் வெளிப் படையாகவே ஏற்றுக்கொள்ள, அதை நம்பாத குடும்பத்தினர், சிறுவன் பாலை ஏதோ ஒரு விதத்தில் கொட்டிவிட்டோ இல்லை தானே சாப்பிட்டுவிட்டோ பொய் சொல்கிறான் போல் இருக்கிறது என்று நினைத்து, கூடவே சென்று பார்த்த பொழுது, சிறுவன் வேங்கடசூரி சமர்ப்பித்த பாலை இறைவன் ஏற்றுக் கொள்வதைக் கண்டு வியந்து போயினர்.

இந்த சிறுவன் மிகச் சிறந்த காவியங்களை எழுதினார். அய்யம்பேட்டை வேங்கடரமட பாகவதரின் பிரதான சீடராக விளங்கினார். இப்படி பல திருத்தலங்களில் பல கதைகள் இறைவன் பிரசாதத்தை நேரடியாக ஏற்றுக் கொண்டதற்குச் சாட்சியாக இருக்கின்றன. இனி எந்தெந்த ஆலயங்களில் என்னென்ன பிரசாதங்கள் சிறப்பாக நிவேதனம் செய்யப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

20. பாயசம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி என்று ஒரு திவ்யதேசம். பக்கத்தில்தான் ஆதிசேது என்று அழைக்கப்படும் சேதுக்கரை இருக்கிறது. இங்கே இருந்துதான் ராமர் இலங்கைக்குப் பாலம் கட்டிச் சென்றார் என்பது புராணம். இங்கே கடல் அரசனிடம் ராமர் தர்ப்பசயனத்தில் அமர்ந்து தியானம் செய்து அனுமதி கேட்டார். சுவாமிக்கு கல்யாண ஜெகன்நாதன் என்ற திருநாமம். இங்கே திருக்கண்ணமது எனப்படும் பாயசம் விசேஷம்.

காரணம், தசரதன் குழந்தை இல்லாத குறை தீர, இங்கே புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்பொழுது யாகத்தில் வந்த பாயாசத்தை தனது தேவியர்களுக்குக் கொடுத்து பகவானையே புத்திரராக அடைந்தார் என்பார்கள். இங்கே தினமும் காலை 10 மணிக்கு பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. ஏலக்காய், ஜாதிக்காய், லவங்கம், முந்திரி, நெய் எல்லாம் சேர்ந்து அற்புதமாக பாயாச பிரசாதம் இருக்கும். பல ஆலயங்களில் பாயச பிரசாதம் உண்டு. சபரிமலை ஐயப்பன் கோயிலிலும், குருவாயூரப்பன் கோயிலிலும் அரவணை பாயாசம் முக்கிய பிரசாதமாகத் தரப்படுகிறது.

21. குடலை இட்லி

காஞ்சிபுரம் என்றால் குடை அழகு என்பார்கள். காரணம் வைகாசி கருடசேவையின் போது சுவாமிக்கு பிடிக்கப்படும் குடை அவ்வளவு அழகாக இருக்கும். பேசும் பெருமாளான வரதராஜப் பெருமாளுக்கு இட்லி பிரசாதம் மிகச் சிறப்பான நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பெருமாளுக்கும் தாயாருக்கும் இட்லி பிரசாதத்தை ஒரு மூங்கில் குடலையில் வைத்து நிவேதனத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதால், இதற்கு குடலை இட்லி என்று பெயர். நம் வீட்டு இட்லி போல் இதற்கு தயார் செய்யும் மாவு இருக்காது.

சற்று கொர கொர என்று இருக்கும். மிளகுத்தூள், சுக்குத்தூள், சீரகத்தூள், கறிவேப்பிலை போன்ற பொருள்களையும் சேர்த்து மணமாகத் தயாரிப்பார்கள். மூங்கில் குடலைக்குள் மந்தாரை இலை வாழை இலையை வைத்து மூன்று மணி நேரம் வேக வைப்பார்கள். இது மட்டுமல்லாமல், தோசையும் வடையும் நிவேதனம் செய்கிறார்கள். பெருமாளுக்கு இரண்டு இட்லிகளையும் நிவேதனம் செய்த பிறகு, ஓர் இட்லி கோயில் கைங்கர்யம் செய்பவர்களுக்கும், மற்றொரு இட்லி கட்டளைதாரருக்கும் கொடுக்கப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, தோசையும் வடையும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

22. அமிர்தகலசம்

அமிர்தகலசம் என்று ஒரு பிரசாதம் உண்டு. பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் எல்லாம் கலந்து கொழுக்கட்டை போன்று வேக வைத்துத் தயாரிக்கப்படுவது. வெல்லப் பூரணம் வைத்த கொழுக்கட்டை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த நிவேதனம் கருடாழ்வாருக்குப் படைக்கப்படுகிறது. அமிர்த கலசத்தை தேவேந்திரனிடமிருந்து கொண்டு வந்ததால், விசேஷமாக அவருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. குறிப்பாக, ஆடி சுவாதியில் (கருட ஜெயந்தி) பல திவ்ய தேசங்களில் சிறப்புப் படையலாக இருக்கும். தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதர், ஆழ்வார் திருநகரி, ஆதிநாதர் சந்நதி, திருப்பதி, கும்பகோணத்துக்கு அருகில் கல் கருடன் விசேஷமாகச் சேவை தரும் நாச்சியார் கோயில் போன்ற திருத்தலங்களில் இது மிகவும் விசேஷம்.

23. புழுங்கலரிசிச் சோறு

புதுக்கோட்டை மாவட்டத்தில், ஆவுடையார் கோயில் என்று ஒரு சிவத்தலம் இருக்கிறது. திருப்பெருந்துறை என்று இந்த ஆலயத்திற்குப் பெயர். மாணிக்கவாசகரை சிவபெருமான் ஆட்கொண்ட தலம். பொதுவாகவே சிவன் கோயில்களில் அன்னம் விசேஷமாகப் படைக்கப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் விசேஷமாக நடக்கும். திருப்பெருந்துறை ஆலயத்தில் தினசரி பூஜையின் போது, புழுங்கல் அரிசியை சாதமாக வடித்து சந்நதி முன்புள்ள அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி அதில் இருந்து வருகின்ற ஆவியை நிவேதனமாகச் செய்யும் வழக்கம் இருக்கிறது. அதோடு பாகற்காய் முளைக்கீரை சேர்த்தே நிவேதனம் ஆகிறது. அர்த்தஜாம பூஜையின் போது புளியோதரை, எள் சாதம், பால் சாதம், உளுந்து சாதம் போன்றவை படைக்கப்படுகின்றன.

24. களி

கோயில் என்றால், சைவத்தில் அது சிதம்பரத்தைக் குறிக்கும். அங்கே ஆனந்த சித்சபையில் நடனமிடும் சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜப் பெருமானுக்கு மார்கழி திருவாதிரை சிறப்பான நாள். இந்த நாளில் நடராஜ மூர்த்திக்கு மிக விசேஷமாக களி தயார் செய்து நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. திருவாதிரை நாளில் படைக்கப்படுவதால், இதற்குத் திருவாதிரைக் களி என்று பெயர்.

“திருவாதிரைக்கு ஒருவாய் களி, உண்ணாதவர்க்கு நரக குழி’’ என்ற ஒரு பழமொழியே உண்டு. பச்சரிசி, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லம், சுக்கு, ஏலக்காய், நெய், முந்திரி எல்லாம் கலந்து தயார் செய்யப்படும் இந்தக் களி, சிதம்பரத்தில் விசேஷமான பிரசாதம். நடராஜப் பெருமானுக்கு மிகவும் உகந்த மற்றொரு பிரசாதம் கல்கண்டு பொங்கல். பச்சரிசி, பால், நெய், முந்திரி மற்றும் ஏலக்காய் கற்கண்டு சேர்த்து செய்யப்படுகிறது.

25. அப்பம்

ஐயப்பனுக்கு மிகவும் பிடித்தமான பிரசாதங்களில் `அப்பம்’ மற்றும் `அரவண பாயசம்’ முதன்மையானவை. இந்த அப்பம் நெய்யில் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது (பகல்பத்து, ராப்பத்து காலங்களில்) பெருமாளுக்குப் படைக்கப்படும் `செல்வர் அப்பம்’ மிகவும் பிரசித்தி பெற்றது. ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களைப் பாடி, இந்த பிரசாதம் நிவேதிக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகே கோவிலடி தலத்திலும் பெருமாளுக்கு அப்பம் பிரசாதமாகச் செய்யப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மண்டையப்பம் எனும் நிவேதனமும் விசேஷமானது. அரிசி மாவு, வெல்லம், பாசிப்பருப்பு, சுக்குப் பொடி, ஏலக்காய், எல்லாம் கலந்து ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் இந்த அப்பம், அற்புதமான பிரசாதமாக இங்கே வழங்கப்படுகிறது.

26. புட்டு

சிவபெருமான் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை நிகழ்த்தியபோது, வைகை ஆற்றங்கரையில் வந்தி என்ற மூதாட்டிக்காக கூலி ஆளாக வந்து புட்டு பிரசாதம் உண்டருளிய தலம் புட்டு சொக்கநாதர் கோயில். மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள புட்டுத்தோப்பில் அமைந்துள்ள இக்கோயிலில், மூலவரான சிவபெருமானுக்கு `புட்டு’ பிரதான பிரசாதமாகப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அறுபடைகளில் முருகப் பெருமான் கடல் ஓரத்தில் காட்சி தரும் படைவீடு திருச்செந்தூர். இங்கே முருகனுக்குச் சமர்ப்பிக்கப்படும் அதிரசம், தேன்குழல், சிறுபருப்பு பொங்கல், நெய்சாதம் எனப் பல வகைகளில் நிவேதனங்கள் இருந்தாலும், இத்தலத்திற்கே உரிய சிறப்பான நிவேதனம் புட்டமது.

பச்சரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரி, நெய் கலந்து தயார் செய்யப்படும் புட்டமது மிகச் சிறப்பான நிவேதனமாகும். இங்கே அர்த்த ஜாம பூஜையில் பால் சுழியன், பால்கோவா, முதலில் நிவேதனங்களும் படைக்கப்படுகின்றன. அதைவிட பன்னீர் இலை திருநீறு பிரசாதம் இங்கே பிரசித்தம். முருகனின் வேல் போல் கூர்மையாகவும் 12 நரம்புகளுடன் கூடிய பன்னீர் இலையில் திருநீறை மடித்துத் தருகின்றனர். நோய் தீர்க்கும் அருமருந்தாக இந்தப் பிரசாதம் விளங்குகிறது.

27. முத்தக்காசு

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் என்னும் திருத்தலத்தில் மிகப் பழமையான வராகப் பெருமாள் சந்நதி அமைந்திருக்கிறது. மிகவும் பிரசித்தமான பெரிய கோயில் மட்டுமல்ல, அற்புதமான சிற்பங்களும் நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த கோயில். இங்கே உள்ள வராகப் பெருமாள் சாளக்கிராமத் திருமேனியோடு தென்திசை நோக்கி முகமும் மேற்கு திசை நோக்கி திருமேனியும் கொண்டு காட்சி தருகின்றார். இவருக்கு நிவேதனமாகப் படைக்கப்படுவது, முத்தக்காசு எனப்படும் கோரைக்கிழங்கு. இதற்கு முஸ்தா சூரணம் என்று பெயர். கோரைக்கிழங்கோடு, அரிசி மாவு, ஏலக்காய், நெய் சேர்த்து லட்டு போல் இந்தப் பிரசாதத்தைத் தருகிறார்கள். நோய் தீர்க்கும் மருந்தாகவும், இந்த பிரசாதத்தை பக்தர்கள் கருதுகிறார்கள்.

காலையில் சுவாமிக்கு படைக்கப்படும் இந்த பிரசாதத்தை நாம் சொல்லி வைத்து விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இதில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பூரா சர்க்கரை என்று பெயர். பூரா சர்க்கரை என்பது வட இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும், சுத்திகரிக்கப்படாத, மென்மையான கரும்பு சர்க்கரை வகையாகும். இது உலர் இனிப்புகள், லட்டு மற்றும் பேடா போன்ற பண்டிகை கால பலகாரங்கள் செய்ய பெரிதும் பயன்படுகிறது.

28. அக்கார அடிசில்

வைணவத்தில் மிகச் சிறப்பான நிவேதனமாக அக்கார அடிசில் பிரசாதத்தைச் சொல்வார்கள். ஆண்டாள் தம்முடைய பாசுரத்தில் திருமாலிருஞ் சோலை அழகருக்கு நூறு அண்டா வெண்ணெயும், நூறு அண்டா அக்கார அடிசிலும் படைப்பதாக வேண்டிக் கொள்ளுகிறாள். அக்காரடிசில் கோயில்களில் மட்டுமல்ல வைணவர்களின் இல்லங்களிலும் சுவாமிக்கு தயார் செய்து படைப்பது உண்டு.

பொதுவாக அரிசி, பாசிப்பருப்பு இவை சர்க்கரைப் பொங்கலுக்கு தண்ணீரில் வேக வைப்பார்கள், ஆனால் அக்கார அடிசிலுக்கு பாலில் வேக வைக்க வேண்டும். அதில் வெல்லம், ஏலக்காய், நெய், பச்சை கற்பூரம், முந்திரி, திராட்சை போன்ற பொருட்களைப் போட்டு சுவையான அக்கார அடிசிலை தயார் செய்ய வேண்டும். இதற்கு இணையான ஒரு பிரசாதமே இல்லை என்று சொல்லலாம். ஸ்ரீ வில்லிபுத்தூர், ஸ்ரீ ரங்கம், திருமாலிருஞ்சோலை முதலிய திருத்தலங்களில் அக்கார அடிசில் பிரதானமான நிவேதனமாக படைக்கப்படுகிறது.

29. மோதகம்

பிள்ளையார் என்றாலே அவருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை ஞாபகத்துக்கு வரும். பிள்ளையார் கொழுக்கட்டைக்கு மோதகம் என்று பெயர். பிள்ளையாருக்கு இது மிகவும் விருப்பம் என்பதால், மோதகப் பிரியன் என்ற திருநாமமே அவருக்கு உண்டு. உச்சிப் பிள்ளையார் கோயில், (திருச்சி மலைக்கோட்டை) விநாயகர் சதுர்த்தியன்று ஆண்டு தோறும் 150 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கொழுக்கட்டை (75 கிலோ உச்சிப் பிள்ளையாருக்கும், 75 கிலோ மாணிக்க விநாயகருக்கும்) தயார் செய்து நிவேதனம் செய்யப்பட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், ஆண்டு தோறும் விநாயக சதுர்த்தி விழாவின் உச்சக்கட்டமாக, மூலவருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பிரம்மாண்ட ஒற்றைக் கொழுக்கட்டை படைக்கப்படுகிறது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், முக்குறுணி விநாயகருக்கு, விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அரிசியால் ராட்சத கொழுக்கட்டை செய்யப்பட்டு நிவேதனம் செய்யப்படுகிறது.

30. ஏன் இத்தனை வகை பிரசாதங்கள்?

பழனியில் பஞ்சாமிர்தம், திருப்பதியில் லட்டு, திருக்கண்ணபுரத்தில் முனியோதரன் பொங்கல், திருவாரூர் தியாகராஜருக்கு நிவேதனமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்து வடை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுண்டக்காய்ச்சிய பாலில் திரண்ட பால்கோவா, மதுரை கள்ளழகர் கோயில் தோசை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மிளகு புளியோதரை, கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுக்கு கஷாயம், உப்பிலியப்பர் கோயிலில் உப்பில்லாத வடை (எல்லா பிரசாதத்திலும் உப்பு இருக்காது), இப்படி நூற்றுக்கணக்கான பிரசாத வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இது அந்தந்த ஆலயங்களுக்கே உரிய பாரம்பரியச் சிறப்பு. நம் நாட்டில் தெய்வ உருவங்களும் அதிகம். ஆலயங்களும் அதிகம். அதற்கேற்ப பிரசாதங்களும் வகைவகையாக அமைந்திருப்பதில் வியப்பில்லை.

எஸ். கோகுலாச்சாரி

 

Related Stories: