*சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆர்வலர்கள் கவலை
ஓசூர் : ஓசூர் மாநகரில் புதிய ெதாழிற்சாலைகள் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பசுமையான சூழலுக்காகவும், இதமான சீதோஷ்ணத்திற்காகவும் குட்டி இங்கிலாந்து என அழைக்கப்பட்ட ஓசூர், பெரும் சுற்றுச்சூழல் சவால்களை சந்தித்து வருகிறது.
ஓசூர் தொழில்துறை கேந்திரமாக மாறியுள்ளதால், நிலத்தடி நீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் பெருக்கத்தால், ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்படுகிறது.
ஓசூர் மற்றும் அதை சுற்றியுள்ள கெலவரப்பள்ளி அணை, ராமநாயக்கன் ஏரி போன்ற நீர்நிலைகள் தொழிற்சாலை கழிவுகளாலும், சுத்திகரிக்கப்படாத நகர சாக்கடை கழிவுநீராலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து அடிக்கடி ரசாயனம் கலந்த நுரை வெளியேறுகிறது. தொழிற்சாலைகளுக்காகவும், புதிய சாலைகள் மற்றும் வீட்டு மனைகளுக்காகவும் காடுகளின் எல்லைகள் சுருக்கப்பட்டு வருகின்றன. இதனால், உணவிற்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, யானைகள் போன்ற வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள்ளும், குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்து விடுகின்றன.
ஓசூரின் புகழ்பெற்ற ரோஜா தோட்டங்கள், காய்கறி பயிரிடப்படும் விவசாய நிலங்கள் ஆகியவை, தற்போது ரியல் எஸ்டேட் பிளாட்டுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன. கட்டுமான பணிக்காக ஓசூரை சுற்றியுள்ள மலைகள் மற்றும் குன்றுகள் வெடிவைத்து தகர்க்கப்படுகிறது. கனிம வளங்கள் அள்ளப்படுகின்றன. இது அப்பகுதியின் இயற்கையான நிலப்பரப்பையே மாற்றியமைக்கிறது.
முன்னொரு காலத்தில் கோடையிலும் குளுமையாக இருந்த ஓசூரில், இன்று கோடைகால வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் இயல்பான மழைப்பொழிவு குறைந்துள்ளது. புதிய சாலைகள், தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, இயற்கை வளங்களை வேகமாக அழித்துக்கொண்டே போனால், அடுத்த தலைமுறைக்கு குடிநீரும், தூய்மையான காற்றும், விவசாயம் செய்ய நிலமும் இல்லாத ஆபத்தான சூழல் உருவாகும்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ரவிசங்கர் கூறியதாவது: ஓசூர் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அதற்கு இணையாக எஸ்டிஆர்ஆர் சாலை, அறிவுசார் வழித்தடம், ரிங் ரோடுகள் என புதிய சாலைகள் அமைக்க, பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளது. மலைக்குன்றுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது.
ஓசூர் பகுதியை பாதுகாக்க, இயற்கை வளங்களை அழித்து புதிய திட்டங்கள் கொண்டு வருவதை குறைக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைகள் மற்றும் நகராட்சி கழிவுநீர் முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே, நீர்நிலைகளில் விட வேண்டும். தீவிரமான மழைநீர் சேகரிப்பு மற்றும் ஏரிகளை தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.
வன எல்லைகளை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் சட்டவிரோத குவாரிகள் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் நாம் வாழ்வதற்கான பூமிப்பந்தை பாதுகாப்பது. ஓசூர் போன்ற வளர்ந்து வரும் நகரங்களில், நிலையான வளர்ச்சி மட்டுமே மனித குலத்தின் எதிர்காலத்தை காக்கும்.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டு வரும் அதிவேக தொழில் மயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் மனிதனின் பேராசை காரணமாக இயற்கை வளங்கள் அழிந்து வருவது கவலையாக உள்ளது. தொழிற்சாலை பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும், மியாவாக்கி போன்ற அடர்ந்த காடுகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
