×

பள்ளிகளின் கல்வி கட்டணம் வசூல் தொடர்பாக புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழு அமைக்க கோரி வழக்கு: அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிகளின் கல்வி கட்டண நிலுவைக் தொகையை பாதுகாக்கவும், வசூலிப்பதற்கும் புதிய கொள்கையை உருவாக்க நிபுணர் குழுவை அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்திந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த மனுவில், கல்வி கட்டணம் செலுத்தாத 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவால் தனியார் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

இதனால் மாற்று வழியின்றி ஆசிரியர்களுக்குச் சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே மாற்றுச் சான்றிதழை நிறுத்தக் கூடாது என்ற விதி உள்ளது. அதை 9 முதல் 12ம் வகுப்புகளுக்கும் நீட்டித்து கடந்த 2024ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் புதிய உத்தரவைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு 9 முதல் 12ம் வகுப்பு படிக்கும் பல மாணவர்களின் பெற்றோர்கள் வசதி இருந்தும் வேண்டுமென்றே கட்டணம் செலுத்த மறுக்கிறார்கள். இதன் காரணமாக பள்ளிகளுக்குக் கடுமையான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, தகுதியான ஆசிரியர்கள் பள்ளிகளை விட்டு வெளியேறி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி முகமது சபிக் முன்பு விசராணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பில் ஏற்படும் கட்டண நிலுவைத் தொகையை அரசே ஒரு நிதியம் அமைத்துப் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். பின்னர் அரசே தனது வருவாய் மீட்புத் துறை மூலம் பெற்றோர்களிடமிருந்து அதை வசூலித்துக் கொள்ள வகையில் விரிவான கட்டணப் பாதுகாப்பு கொள்கையை உருவாக்க ஒரு நிபுணர் குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 25ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags : Chennai ,High Court of Chennai ,Government of Tamil Nadu ,India ,Chennai High Court ,
× RELATED ஏர் ஓட்டும் மாட்டுக்கு உழக்கோலில் அடி...