- ஆகாஷ்
- மதுரை
- உயர் நீதிமன்றம்
- மானாமதுரை
- மதுரை அரசு மருத்துவமனை
- ராஜேஷ் கண்ணன்
- கிருஷ்ணராஜபுரம் காலனி, மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் 101 நாட்களாக இருந்த மானாமதுரை வாலிபர் ஆகாஷ் உடல், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி நேற்று தகனம் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, கிருஷ்ணராஜபுரம் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மகன் ஆகாஷ் (24). ஒரு வழக்கில் விசாரணைக்கு சென்றபோது, போலீசார் தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மார்ச் 8ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில், ஆகாஷ் உடலில் மொத்தம் 28 வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதன்பேரில் கொலை வழக்கு மற்றும் எஸ்சி – எஸ்டி வன்கொடுமை தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனிடையே, ஆகாஷ் மரணத்தில் தொடர்புடைய போலீசார் 6 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்ட ஆகாஷ் உடலை, பெற்றோர், உறவினர்கள் வாங்க மறுத்து தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் ஆகாஷ் உடல் மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஆகாஷ் உடலை குடும்பத்தினர் வாங்கி அடக்கம் செய்யுமாறு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தியபோதும், உடலை வாங்க மறுத்து வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘15ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆகாஷ் உடலை பெற்றோர் பெற்றுக் கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். ஆனால் உடலை குடும்பத்தினர் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, ஆகாஷ் உடலை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், அரசு மருத்துவமனை டீன் ஏற்பாட்டில் கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கோட்டாட்சியர் கருணாகரன், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி சரவணன் ஆகியோர் முன்னிலையில், மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறை பகுதியில் இருந்த ஆகாஷ் உடல் நேற்று காலை வீடியோ, போட்டோ எடுத்து பதிவு செய்யப்பட்டது. அப்போது, மருத்துவமனைக்கு வந்திருந்த ஆகாஷின் பெற்றோர், உறவினர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர், ‘‘ஒருபோதும் உடலை ஒப்படைக்கக்கூடாது. அரசு மருத்துவமனை பிணவறையில்தான் இருக்க வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம்’’ எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஆகாஷின் பெற்றோர் உள்ளிட்டோர் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு மதிச்சியம் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை தத்தனேரி மயானத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் ஆகாஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு இறுதிச்சடங்கில் பங்கேற்கும் வகையில் வேனில் ஏற்றிச்சென்ற ஆகாஷ் பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்களை அழைத்து வந்தனர். தத்தனேரி மயானத்தில் கோட்டாட்சியர் கருணாகரன் ஆகாஷ் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அங்கு வந்த ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ்கண்ணன் – ஆனந்தி, குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். உடல் தகனத்திற்கு முன்னதாக, அது ஆகாஷ் உடல் தானா என்பதை உறுதிப்படுத்திட, தங்கள் மகன் கையில் 6 விரல்கள் இருப்பதையும், அதை காட்டுமாறும், பெற்றோர் கூறினர். இதையடுத்து அதிகாரிகள், ஆகாஷின் 6 கைவிரலை காட்டிய பிறகு, உடல் தத்தனேரி மின் மயானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு, கோட்டாட்சியர் கருணாகரன் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
என் மகன கொன்னவங்க நாசமா போவாங்க… மண்ணை தூற்றி தாய் சாபம்
தகனம் செய்தபோது ஆகாஷின் தாய் ஆனந்தி, ‘‘ஆகாஷை கொன்றவர்களை கைது செய்ய துப்பில்லை. என் மகனை கொன்றவர்கள் அனைவரும் அழிந்து நாசமாக போவார்கள். மகன் சாவுக்கு காரணமான அத்தனை பேரும் எங்கள் பாவத்தை அனுபவிப்பார்கள்’’ எனக்கூறி கதறி அழுதபடி, போலீசாரை நோக்கி மண்ணை தூற்றி தனது மனக்கொதிப்பை வெளிப்படுத்திச் சென்றார். ஆகாஷ் இறந்து 102வது நாளில் ஐகோர்ட் கிளை உத்தரவில் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
