×

அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் எதிர்த்து வழக்கு: பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்த வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த மைக்கேல் தங்கராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து சிறப்பு கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசின் 2008ம் ஆண்டின் அரசாணை ரத்து செய்துள்ளது. இருந்தாலும், பல பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. ராமநாதபுரம், தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலை தொடர்கிறது.

ராயப்பன்பட்டி, ராமநாதபுரம், அத்திப்பட்டு பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடமிருந்து அரசாணைக்கு முரணாக வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசின் விதிமுறைகள் மற்றும் அரசாணைகளுக்கு மாறாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதை உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை பிறப்பிக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இம்மனு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பள்ளிகள் தரப்பில், ‘பாதிக்கப்பட்ட பெற்றோரே நீதிமன்றத்தை நாடலாம் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதிகள், ‘‘அரசாணை இருந்தும் எவ்வாறு சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றனர். பின்னர் மனுவிற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : School Education Secretary ,Madurai ,High Court ,Michael Thangaraj ,Uttampalayam, Theni district ,
× RELATED பள்ளிகளின் கல்வி கட்டணம் வசூல்...