×

தூத்துக்குடியில் ரூ.38,000 கோடியில் நவீன கப்பல் கட்டுமான திட்டம்: முதல்வர் விஜய்யுடன் எச்.டி.ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்பு

சென்னை: தென் கொரியாவை தலைமையகமாக கொண்ட எச்.டி.ஹூண்டாய் நிறுவனம், உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனங்களில் ஒன்றாகும். தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமான தொகுதி ஒன்றை அமைப்பதற்காக இந்நிறுவனம் தமிழ்நாடு அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப்பெரிய கப்பல் கட்டுமான தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள், முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்த கப்பல் கட்டுமான திட்டத்தில் சுமார் ரூ.38,000 கோடி (4 பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 15,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகள் உருவாகும். முதல்வர் விஜய், இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்திற்கு முழுமையான நிர்வாக ஆதரவும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராமன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு குழு தலைவர் சன்ஜூன் ஹோங், உலகளாவிய வணிக குழு மூத்த மேலாளர் ஹோங் சியோல் கிம், குழு தலைவர் கிவான் லீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Thoothukudi ,HT Hyundai ,CM Vijay ,Chennai ,South Korea ,Tamil Nadu government ,
× RELATED ஏர் ஓட்டும் மாட்டுக்கு உழக்கோலில் அடி...