மொன்டெர்ரி: உலகக் கோப்பை கால்பந்து குரூப் எப் பிரிவில் மெக்சிகோவின் மொன்டெர்ரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் துனிசியா அணியும் ஸ்வீடன் அணியும் மோதின. ஸ்வீடன் அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்திலேயே ஸ்வீடனின் யாசின் அயாரு ஒரு அதிரடி கோல் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தார். 32வது நிமிடத்தில் அலெக்சாண்டர் இஷாக் ஒரு கோல் அடிக்க, ஸ்வீடன் 2-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட துனிசியா அணி முதல் பாதியின் இறுதியில் பதிலடி கொடுத்தது. ஹனிபால் மெஜ்பிரி கொடுத்த அருமையான கிராஸை பயன்படுத்தி கரீம் ரெகிக் 42வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் ஸ்வீடன் 2-1 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் துனிசிய கேப்டன் ஸ்கிரி செய்த தவறால் பந்தைப் பெற்றுக்கொண்ட ஸ்வீடனின் இஷாக், அதை விக்டர் கியோகெரஸிடம் பாஸ் செய்ய, அவர் அதனை எளிதாக கோலாக மாற்றினார். இதனால் ஸ்வீடன் 3-1 என முன்னிலை பெற்றது. 84வது ஸ்வீடன் மற்றொரு கோல் அடித்தது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் யாசின் அயாரு தனது 2வது கோலை அடித்தார். இறுதியில் ஸ்வீடன் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
2வது அதிவேக கோல்
ஸ்வீடன் -துனிசியா ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் மாற்று வீரராகக் களமிறங்கிய மேட்டியாஸ் ஸ்வான்பெர்க், மைதானத்திற்குள் நுழைந்த 18 விநாடிகளிலேயே கோல் அடித்து அசத்தினார். இது உலகக் கோப்பை வரலாற்றில் மாற்று வீரர் ஒருவர் அடித்த 2வது அதிவேக கோலாகும். 2002ல் உருகுவேயின் ரிச்சர்ட் மொராலஸ் 16 விநாடிகளில் அடித்ததே முதலிடத்தில் உள்ளது.
