ஒளிமய வாழ்வருளும் வெக்காளியம்மன்

சிவ-சக்தி சொரூபம் என்பதுதான் அர்த்தநாரி வடிவம். இறைவன் உமையொரு பாகனாக அருட்காட்சியளித்து, ஆண், பெண் இரு பாலினமுமே சம ஆற்றலுடையது என்று விளங்க வைக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோயில், தஞ்சாவூர் அருகேயுள்ள தாராசுரம் கோயில், சென்னை நங்கநல்லூரில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் ஆகியவற்றில் ஈருடல், ஓர் வடிவமாகப் பேரருள் பொழிகிறார் பரமேஸ்வரன். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் மற்றும் தஞ்சை பெரிய கோயிலில் அவர் கோஷ்ட மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார்.

பொதுவாக, இந்தக் கோலத்தை சக்தி சமேத சிவன் என்றுதான் நாம் பரவலாகப் பேசுகிறோம். ஆனால், சக்தி, சிவரூபமாக விளங்குகிறாள் என்று சொல்லத்தக்க வகையில் திருச்சி மாநகரில் வெக்காளியம்மனாக அருள்மழை பொழிகிறாள் அம்பிகை. ஈசன் தன் உடலில் பாதியைக் கொடுத்தது போல, அந்த மஹேஸ்வரனின் அம்சங்களைத் தான் தாங்கி, அர்த்தநாரியாக அம்மன் விளங்குகிறாள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?ஆமாம், இங்கே வெக்காளியம்மன் வலது மேல் கரத்தில் உடுக்கை, இடது மேல் கரத்தில் பாசம், வலது கீழ்க் கரத்தில் சூலம், இடது கீழ்க் கரத்தில் கபாலம் என்று ‘சிவ தோரணை’யுடன் அமர்ந்திருக்கிறாள். அப்படியென்றால், இந்த அம்பிகை, ‘அர்த்தநாரி’தானே? அதோடு பொதுவாக பிற கோயில்களில் காணப்படுவது போல அல்லாமல், அம்மனின் அமர்ந்த தோற்றம் மாறுபட்டு இருக்கிறது. ஆமாம், இடது காலைத் தொங்கவிட்டு, வலதுகாலை மடித்து அமர்ந்திருக்கிறாள். அந்த வலதுகால், அரக்கன் ஒருவனை மிதித்துக் கொண்டிருக்கிறது. கழுத்தில் திருமாங்கல்யம், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கைகளில் வளையல்கள் என்று அலங்காரபூஷிதையாக அருட்காட்சி வழங்குகிறாள் அன்னை.

திருச்சி உறையூர் பகுதியில் இந்த அம்மன் கோயில் கொண்டதன் வரலாறு என்ன? சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதி, வன்பராந்தக சோழன் என்ற மன்னனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. உறந்தை என்று அழைக்கப்பட்ட இப்போதைய உறையூரான இந்நகரைத் தலைமை இடமாகக் கொண்டு ராஜபரிபாலனம் செய்து வந்தான் மன்னன். இந்த ஊரின் காவல் தெய்வமாக ஆதியிலிருந்தே விளங்கி வருபவள்தான் வெக்காளியம்மன். மன்னனுக்கு சாரமா முனிவர் என்ற வேத விற்பன்னர் ராஜகுருவாக அமைந்தார். முனிவர் ஆழ்ந்த சிவ பக்தர். அரண்மனை வளாகத்தில் அழகியதொரு பூங்காவனம் அமைத்து, அதிலிருந்து மலர்களைச் சேகரித்து, அந்த ஊர்க் கோயில் மூலவரான தாயுமானவ ஸ்வாமியை தினமும் அர்ச்சித்து வழிபட்டு வந்தார்.

அவருடைய இந்த வழக்கம் மன்னனுக்கும் தெரியுமென்றாலும், அந்த மலர்களின் அழகும், வாசமும், அவை, தன் மனைவியும், பட்டத்து ராணியுமான புவனமாதேவியின் கூந்தலை அலங்கரித்தால் அவள் பேரழகோடு பொலிவாளே என்று சிந்திக்க வைத்தன. உடனே தன் சேவகர்களை அனுப்பி, பூங்காவனத்திலிருந்து மலர்களைப் பறித்து வரச் சொன்னான். தலைவன் எட்டடி என்றால், தொண்டன்தான் பதினாறு அடி பாய்வானே! உடனே அவர்கள் முனிவரின் வனத்துக்குள் புகுந்து, அனைத்து மலர்களையும் பறித்துச் சென்று மன்னனிடம் சேர்ப்பித்தார்கள். மன்னனும், தாதிப் பெண்களிடம் அவற்றைக் கொடுத்து, சரங்களாகத் தொடுத்து, தன் மனைவியை அலங்கரிக்கச் சொன்னான். அந்த அலங்காரத்தில் அவள் ஒப்பற்ற அழகுடன் திகழ்வதைக் கண்டு உள்ளம் கிளர்ந்தான்.இந்தச் சம்பவத்துக்கு மறுநாள் தன் தோட்டத்திற்கு வந்த சாரமா முனிவர், மலர்களற்ற செடி, கொடி, மரங்களைக் கண்டு திடுக்கிட்டார்; மனம் நொந்தார். இறைவனுக்கு உரிய அந்த மலர்களைத் தனக்கு முன்னால் பறித்துச் சென்றது யார் என்று கண்காணித்தார். அதிகாலையில் பொழுது புலருமுன் பூங்காவனத்திற்குள் சென்று பார்த்த அவர் அரண்மனை சேவகர்கள் அந்தத் திருட்டைச் செய்வதைக் கண்டார். மலர்கள் நேராக மன்னரின் அந்தப்புரத்துக்குப் போவதையும் அறிந்து வெகுண்டார். நேரே மன்னனிடமே சென்று புகார் தெரிவித்தார். அவனோ அவரை அலட்சியப்படுத்தி, தன் மனைவிக்குப் போகத்தான், அடுத்து யாருக்கும் அந்த மலர்கள் உரியன என்று சொல்லித் தன் அதிகாரத்தை நிலைநாட்டினான்.

மன்னனே இவ்வாறு செயல்பட்டால் முனிவர் வேறு எங்குதான் போவார். தான் தினமும் போற்றி வணங்கும் தெய்வமான தாயுமானவரிடம் முறையிட்டார். தன் அடியார் அடைந்த அவமானத்தைத் துடைக்க எண்ணிய இறைவன், தன் நெற்றிக்கண் பார்வையை உறையூர் பக்கம் திருப்ப, அவ்வளவுதான், நெருப்பு மழை பொழிந்தது! மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள ஊரை விட்டே ஓடினார்கள். நெருப்பின் தகிப்பில் மன்னனின் கோட்டையும் உருகிக் கரைந்தது. ஆனால், இந்த நெருப்பு மழையால் பாதிக்கப்படாமல் நிலைத்து நின்ற வெக்காளியம்மனின் கோயிலுக்குள் சில பக்தர்கள் சென்று, மனமுருக வேண்டிக் கொண்டார்கள். அன்னையும் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, தாயுமானவ ஸ்வாமிக்கு முன்னால் முழு நிலவாகத் தோன்றினாள். அம்பிகையின் குளிர்ந்த பார்வையால் மனமிரங்கிய இறைவன், கோபம் தணிந்தார். நெருப்பு மழையும் நின்றது. இதற்கிடையில், நெருப்பில் சிக்கிக் கொண்ட பட்டத்து ராணி, புவனமாதேவி அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். நெருப்பின் வெம்மை தாங்காமல் அவள் ஓடிச்சென்று காவிரி ஆற்றில் குதித்தாள். ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அவள், உத்தமசேரி என்ற பகுதியில் அந்தணர் ஒருவரால் மீட்கப்பட்டாள். அவர் அவளைத் தன் இல்லத்தில் வைத்துப் பராமரித்தார். அரண்மனை வாழ் அரசிக்கு, அந்தணர் வீட்டில் சுகப்பிரசவம் ஆயிற்று. குழந்தை, ‘கரிகால் பெருவளத்தான்’ என்று பெயர் கொண்டான். ஏற்கெனவே புவனமாதேவி, வெக்காளியம்மனின் பக்தை என்பதால், அவளும் வேண்டிக் கொண்டாள். அதனால் தொடர் பாதிப்பு நிகழாமல் அன்னையின் அருளால் தடுக்கப்பட்டது. இவ்வாறு காளியின் கருணையால் அவள் பிழைத்ததோடு, சோழ குலத்தின் வம்சம் தழைக்க வைத்த பெருந்தன்மைக்கு ராணியும், மக்களும், வெக்காளியம்மனுக்கு நன்றி செலுத்தினார்கள்.

அதேசமயம், ஈசனின் உக்கிரத்தால் தம் வீடுகளை இழந்து பொட்டல் வெளியில் மக்கள் வாழ வேண்டிய அவலத்தைக் கண்டு, தன் சந்நதிக்கு மேற்கூரை வேண்டாம் என்று மறுத்துத் தன் பாசத்தை வெளிக்காட்டினாள் காளியம்மன். நாளாவட்டத்தில் மக்கள் தங்களுக்கென்று வீடுகள் கட்டிக் கொண்டு அவற்றுக்கு கான்க்ரீட் கூரைகளை அமைத்துக் கொண்டார்கள் என்றாலும், அம்மன் மட்டும், இன்றளவும், கூரையற்ற கருவறையிலேயே தரிசனம் அருள்கிறாள். ஆன்மிக அன்பர்கள் பலமுறை முயற்சித்தும் அவ்வாறு கூரை அமைக்க இயலாமல் போனது என்றாலும், தம் ஆறுதலுக்காக, அம்மனின் கருவறையைச் சுற்றி விதானத்துடன் கூடிய மண்டபத்தை அவர்கள் அமைத்திருக்கிறார்கள்.
உலக நாயகியான பராசக்தியின் அவதாரங்களில் குறிப்பிடத்தக்கது காளி வடிவமாகும். இந்த உறையூர் அம்மன், வடக்கு திசை நோக்கியபடி, யோக பீடத்தில் அமர்ந்து, சிவ அம்சங்களுடன், கம்பீரத் தோற்றம் அருள்கிறாள்.

கோயிலுக்குள் செல்ல வடக்கு, தெற்கு இரு திசைகளிலும் வாயில்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், பக்தர்கள் பெரும்பாலும் தெற்கு வாசல் வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு நுழைந்தால், இடது வரிசையாக வல்லப கணபதி, விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர், காத்தவராயன், புலி வாகன பெரியண்ணன், மதுரை வீரன் சுவாமி, நாகப் பிரதிஷ்டையுடன் விநாயகர் ஆகிய சந்நதிகளை தரிசிக்கலாம். காவல் தெய்வங்களின் அணிவகுப்பாக அமைந்திருக்கும் இந்த சந்நதிகள், பிரதான காவல் தெய்வமாகிய வெக்காளியம்மன் கோயிலில் காணப்படுவது மிகவும் பொருத்தமானதே.
அடுத்து உற்சவர் சந்நதி. நவராத்திரி கொண்டாட்ட நாட்களில் இந்த உற்சவர் அம்மன் தனிப்பொலிவுடன் விளங்குகிறாள். ஆமாம், அச்சமயத்தில் மூலவர் அம்மனுக்குச் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களும் இந்த உற்சவ அம்மனுக்கும் செய்யப்படுகின்றன.

இந்தக் கோயிலில் பொங்கு சனீஸ்வரர், பிரத்யேகமாக பக்தர்களை ஈர்க்கிறார். இவரை வணங்குவோர் தம் வாழ்க்கையில் இன்பம் பொங்கக் காண்பர், செல்வ வளம், உடல் நலம் எல்லாம் உள்ளம் மகிழ அடைவார்கள் என்பது பரவலான நம்பிக்கை. அதேசமயம், கோயிலின் ஈசான மூலையில் நவகிரக சந்நதி அமைந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும். நாட்டில் ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களிடம் மக்கள் தம் குறை நீங்க மனு அளிப்பதைப் போல, இந்த அம்மனிடமும் அளிக்கலாம். இது, ‘பிரார்த்தனை சீட்டு முறை’ என்று இங்கே வழக்கத்தில் இருக்கிறது. மூலவரான அம்மன் சந்நதிக்கு எதிரே ஒரு சூலாயுதம் நிறுவப்பட்டுள்ளது. தம் வாழ்க்கையில் பிரச்னைகளை சந்தித்து அவற்றுக்குத் தீர்வு காண முடியாமல் ஏங்கும் பக்தர்கள், தம் குறை(களை) கோயில் அலுவலகத்தில் வழங்கப்படும் சீட்டில் எழுதுகிறார்கள். பிறகு வெக்காளியம்மனை மனதார வேண்டிக் கொண்டு அம்பிகைக்கு எதிரே உள்ள சூலத்தில் கட்டி வைத்து விடுகிறார்கள். தங்களுடைய பிரச்னைகள் தீர்வான பிறகு, மீண்டும் கோயிலுக்கு வந்து தம் நன்றிக் காணிக்கையை அம்மனுக்கு சமர்ப்பிக்கிறார்கள்; சிலர் அபிஷேகம், அர்ச்சனை அல்லது புடவை சாத்துதல் என்றும் நன்றியறிதலைத் தெரியப்படுத்துகிறார்கள். இடது உள்ளங்கையில் பிடித்துக் கொண்டோ அல்லது மடியில் வைத்துக் கொண்டோ தங்கள் விண்ணப்பத்தை எழுத பக்தர்கள் சிரமப்பட வேண்டாம்; இதற்கென கோயில் வளாகத்தில் தனி இடம் இருக்கிறது. அங்கே வைத்து எழுதிக் கொண்டு வரலாம்.

பொதுவாக கோயில் என்றால் அதற்கென்று பிரத்யேகமாக தீர்த்தம் மற்றும் தல விருட்சம் என்று அடையாளங்கள் இருக்கும். ஆனால், இந்த வெக்காளியம்மன் கோயிலில் அவை இரண்டுமே இல்லை. ஈசனின் ஆணையால் பொழிந்த நெருப்பு மழை இந்தத் தலத்தில் நீரை ஆவியாக்கி, வற்றச் செய்தும், மரங்களையெல்லாம் தீக்கிரையாக்கியும் கோர தாண்டவம் ஆடியதன் பாதிப்பு இன்றளவும் நீங்காதிருக்கிறதோ என்று பக்தர்கள் வியப்படைகிறார்கள்.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்களாக இறை வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. முக்கியமாக வைகாசி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மூலவர் அம்மனுக்கு மாம்பழ அபிஷேகம் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்கள் கூடை கூடையாக மாம்பழங்களைக் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இவ்வாறு அபிஷேகம் செய்யப்படும் மாம்பழங்கள் பிறகு பக்தர்களுக்கே பிரசாதமாக வழங்கப்படுகிறது. காவல் தெய்வமாக ஊருக்கு வெளியே கோயில் கொண்டிருந்த வெக்காளியம்மன், இப்போது ஊருக்கு நடுவே பெரிய கோயில் வளாகத்தில் இடம் பெற்றிருக்கிறாள். சொந்த ஊர் மக்கள் என்றில்லாமல், வெளியூர், வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்களை ஈர்த்து அவர்கள் அனைவருக்கும் பேரருள் புரிகிறாள். திருமணத் தடை நீக்குதல், மகப்பேறு அளித்தல், மரண பயம் போக்குதல், கல்வி, தொழில், வியாபார அபிவிருத்தி, உயர் பதவி என்று எந்தவகைத் தேவை என்றாலும், வெக்காளியம்மனிடம் மனமுருகி வேண்டிக் கொண்டால், ஒரு அன்புத் தாயின் பரிபூரண கருணையோடு, அவை எல்லாம் ஈடேற பேரருள் புரிகிறாள் ‘அர்த்தநாரி’யான இந்த அம்மன்!

ப்ரபுசங்கர்

 

Related Stories: