சின்னமனூரில் கழிவுநீர் குளமாக மாறி வரும் விசுவன்குளம் மாசுபடும் நீர்நிலையை காக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

சின்னமனூர், மார்ச் 8: சின்னமனூரில் கழிவுநீர் குளமாக மாறி வரும் விசுவன்குளத்தை தூர்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சின்னமனூர் நகராட்சி 19வது வார்டில் சுல்லக்கரை ரோடு, சீப்பாலக்கோட்டை ரோடு, மருதமுத்து சேர்வை தெரு, ஊர்காலன் தெரு, விஸ்வன்குளம் என ஐந்து தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில், விஸ்வன்குளத்தை சுற்றி முன்பு தோட்டங்கள் அதிகமாக இருந்தன. மழை காலங்களில் மின்நகர் மேட்டுப்பகுதி மற்றும் மலை அடிவாரத்திலிருந்து வரும் மழைநீர் இந்த குளத்தை நிரப்பும். இதனால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்துக்கும் பொதுமக்களுக்கும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் விசவன்குளம் பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்தன. மேலும், இப்பகுதியில் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, அரசு மாணவியர் விடுதி, ரேசன் கடை, தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, சமூதாயக்கூடம்,  நவீன கழிப்பிடங்கள் ஆகியவை உருவாகின.

இந்நிலையில், விசுவன்குளத்தை சுற்றி கருவேல மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்தன. குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் தேங்கியது. இதில் கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்கியது. இந்த குளத்தை தூர்வாரி, சுற்றுப்புறத்தில் இருக்கும் செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மாசுபடும் நீர்நிலையை பாதுகாக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது குறித்து ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி கூறுகையில், ‘பல ஆண்டுகளாக விசுவன் குளத்தில் கழிவுநீர் பெருகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

Related Stories: