ஆவடி: தொடர் மின்வெட்டு கண்டித்து ஆவடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையின் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர்கள், உடல்நிலை பாதித்தோர் தூக்கமின்றி பரிதவித்து வருகின்றனர். அறிவிக்கப்படாத மின்தடை பொதுமக்களை பெரும் துயரத்திற்கு ஆளாக்கி உள்ளது. ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று அதிகாலை 3 மணி முதல் 7.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் முறையாக பதில் தெரிவிக்கவில்லை. மேலும், தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்க முயன்றவர்களின் இணைப்பை துண்டித்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று அதிகாலை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பினர். வழக்கம்போல், அதிகாரிகள் பதில் அளிக்காத நிலையில், ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதித்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி காவல் நிலைய போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மின்தடைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை சாலை மறியலை தொடர்வோம், என்று கூறி சாலை மறியலை தொடர்ந்தனர். இதனால் பூந்தமல்லி சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதனைத்தொடர்ந்து, மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆவடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
