கேளம்பாக்கம் கோவளம் சாலையில் குப்பைகள் எரிப்பதால் புகைமூட்டம் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சி சென்னையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த, ஊராட்சியில் போதிய இடம் இல்லாததால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், உணவுக் கழிவுகள், கட்டுமான இடிபாடுகள் போன்றவை கோவளம் செல்லும் சாலையினை ஒட்டி கொட்டப்படுகிறது. இவ்வாறு, கொட்டப்படும் கழிவுகளில் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிட ஏராளமான மாடுகள், நாய்கள், பன்றிகள், பறவைகள் இங்கு முகாமிட்டு உள்ளன. வாரத்திற்கு ஒருமுறை இங்கு கொட்டப்படும் குப்பைகளும், கழிவுகளும் எரிக்கப்படுகின்றன. இவ்வாறு எரிப்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை சுமார் அரை கி.மீ. தூரம் வரை பரவி அருகில் உள்ள தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளை பரப்புகிறது.

இதனால் குழந்தைகள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு கண் எரிச்சல், நெஞ்சு எரிச்சல், தொண்டை வலி போன்ற நோய்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, இச்சாலை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், கார், வேன்களில் செல்வோரும் இந்த புகையால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. எனவே, கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும் என்றும், குப்பை கொட்டுகின்ற இடத்தில் அவற்றை எரிக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

Related Stories: