புதுடெல்லி: டெல்லி துளகாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெல்லி ஓக்லா தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட துளகாபாத் பகுதியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை 2:35 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலிருந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் 8 பேரை மீட்டு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
குறுகிய தெருவில் கட்டிடம் அமைந்திருந்ததால் மீட்புப் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்தார். 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் போராடி அதிகாலை 3:45 மணி அளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
