×

குளத்தின் மடை மூடாததால் வெளியேறி குடியிருப்பில் தேங்கிய மழைநீர்: அதிகாரிகள் அலட்சியம்

 

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே பட்டர்குளம் காலனியில் வீடுகளின் முன்பு தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பூதப்பாண்டி அருகே ஆரல்வாய்மொழி- நெடுமங்காடு சாலையில் பட்டர்குளம் காலனி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியின் ஒரு பகுதியில் வண்ணான்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு பல்வேறு சானல்களில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். இந்தநிலையில் பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் குளங்கள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்படி வண்ணான்குளத்துக்கும் தண்ணீர் வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே குளத்தின் அடிமடை பகுதியை மூடாத காரணத்தால் குளத்துக்கு வரும் தண்ணீர் அந்த வழியாக வெளியேறி நேற்று பட்டர்குளம் காலனிக்குள் புகுந்து அங்குள்ள வீடுகள் முன்பு தேங்கியது. குளத்தில் இருந்து திடீரென தண்ணீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இன்று காலையிலும் வீடுகளின் முன்பு தண்ணீர் தேங்கி நின்றதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அவதியுற்றனர்.

இதற்கிடையே குளத்தில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதி மட்டுமின்றி ஆரல்வாய்மொழி- நெடுமங்காடு பிரதான சாலையிலும் மழைநீர் பாய்ந்தோடியது. இதனால் அந்த சாலை வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், வண்ணான்குளத்தின் அடிமடையை மூடாததே குடியிருப்புக்குள் தண்ணீர் வருவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைவில் கவனத்திற்கு எடுத்து பட்டர்குளம் காலனியில் வீடுகளின் முன்பு தேங்கிய மழைநீரை அகற்றுவதோடு, வண்ணான்குளத்தின் அடிமடையை மூடி தண்ணீர் வெளியேறாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Bothapandi ,Butterkulam Colony ,Aralvaimozhi-Nedumangadu Road ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து நாளை டெல்டா...