மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடிக்கும் கீழ் உள்ளதால் டெல்டா பாசனத்திற்கு நாளை தண்ணீர் திறக்கவாய்ப்பு இல்லை. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலையில் சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் இன்று 3வது நாளாக நீர்வரத்து 1000 கனஅடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 528 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 424 கனஅடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 79.69 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 79.62 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 41.57 டிஎம்சியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 80அடிக்கும் கீழ் உள்ளதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை அணையில் இருந்து நீர்திறக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் குறுவை சாகுபடி முழுமையாக பாதிக்கப்படும். கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குபருவமழை தீவிரமடையாததால் சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைப்பது சிக்கல் தான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த திமுக ஆட்சியின் போது 2024ம் ஆண்டில் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் டெல்டா பாசனத்திற்கு ஜூலை 28ம்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது கிணற்று நீர் பாசனம் மூலம் குறுவை சாகுபடியை பாதுகாக்க தமிழக அரசு ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் ‘குறுவை சிறப்புத் தொகுப்பு’ அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், விதை நெல், மற்றும் பாசன மோட்டார்களுக்குத் தேவையான மானியங்கள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய தவெக அரசு அதுபோல் குறுவை சிறப்புதொகுப்பை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
