சென்னை: அதிமுகவுடன் அமமுக இணைப்பதாகச் சூழ்நிலை வந்திருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம், ஆனால் எங்கள் தலைமை கழக நிர்வாகி யாரும் பேசவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சில மாவட்டங்களில் நிர்வாகிகள் வேறு கட்சியில் இணைந்துள்ளனர். அங்கு சென்றபோது கூண்டோடு கலைந்து விட்டோம் என்று எல்லாம் தெரிவித்தார்கள், ஆனால் அது உண்மை இல்லை. அந்த மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களாக உள்ளனர்.
கட்சி மாறிச் செல்பவர்களுக்கு நாங்கள் வருத்தம் தான் பட முடியும். இந்தக் கட்சி ஆரம்பித்தது இது போன்று கட்சி தாவிகளுக்கு இல்லை, என்னுடன் பயணிக்கும் உண்மைத் தொண்டர்களுக்காகத் தான். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை எப்படி மறுசீரமைப்பு செய்வது என்பதைத் தான் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம். தற்போது கட்சி தோல்வி மற்றும் சீட் கிடைக்கவில்லை என்றால் சொந்தக் காரணத்திற்காக அங்கு செல்கின்றனர். சில நண்பர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது. 10 மணிக்கு சந்திப்பு என்றால் கதவைக்கூட திறக்காமல் வைத்திருக்கிறார்கள். கேட் கூட திறக்காத இடத்திற்குச் சென்றது, பல முறை அமைச்சராக 25 ஆண்டு காலம் கட்சியாக அவர்கள் இருந்த பகுதிகளில் பலனடைந்தவர்கள்.
கட்சி தோல்வி என்றால் அவர்களும் காரணம்தானா? ஏதாவது பிரச்சனை என்றால் தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். இது போன்று கட்சி மாறுபவர்களுக்கு வருத்தப்படுகிறோம். 2017ம் ஆண்டு அதிமுக துணைப் பொது செயலாளராக இருந்தேன், ஆனால் 2 மாதத்தில் கட்சியை விட்டு நீக்கினார்கள். அப்பொழுதும் அவர்களுடன் தான் செயல்பட்டேன். 6 மாதம் காத்திருந்தேன், சிறைக்குச் சென்று வந்தேன். பொறுமையாக இருந்தேன். அதற்குப் பிறகு அமமுக தொடங்கப்பட்டது. 9 ஆண்டு காலம் கட்சி நடத்தி வருகிறோம். 2026 ஆண்டு ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூட்டணிக்கு அழைத்தார். அதன் அடிப்படையில் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று முயற்சி செய்தோம், ஆனால் அது நடக்காமல் போனது.
இப்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்.மற்ற கட்சிகள் போன்று ஒரு கூட்டணியில் வெற்றி பெற்று அதற்கு நேரெதிராக இருக்கும் கட்சிக்குச் சென்று அமைச்சர் ஆவது, ஆதரவு அளிப்பது, காரணம் கேட்டால் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது, பாஜக ஆட்சி வந்துவிடக் கூடாது என்று சொல்வது எல்லாம் தவறு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுடன் தான் பயணிக்கிறோம். அதிமுகவுடன் இணைப்பதாகச் சூழ்நிலை வந்திருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை கழக நிர்வாகி அல்லது மாவட்ட நிர்வாகி யாரும் பேசவில்லை. இந்தக் கடினமான காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறோம்.
தவெக திராவிட கட்சிக்கு மாற்று என்று தெரிவித்துவிட்டு நாங்கள் சொல்வதைத் தான் செய்து வருகிறார்கள். புதிய ஆட்சியாகத் தெரியவில்லை. தமிழகத்தில் குதிரைப் பேரம், யானைப் பேரம் எல்லாம் தாண்டி காக்கைப் பேரம் புதிதாக வந்துள்ளது. அதற்கு தவெக ஆட்சிதான் காரணம். வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்று இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசி ஆட்சி இந்த ஆட்சி என்று சொல்லும் நிலைக்கு எங்களைத் தள்ளிவிடாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
