நியூஸ் பைட்ஸ்

நன்றி குங்குமம் தோழி

ஐரோப்பாவை உலுக்கும் வெயில்

உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டம், ஐரோப்பாதான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவின் தெற்கு, மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகி வருகிறது. அங்கே பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் வெப்ப அலையினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடு, பிரான்ஸ்தான். தற்போது பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் எல்லாம் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியுள்ளது.

இதற்கடுத்து, ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள டாமா போன்ற கிராமங்களில் வெப்பநிலை 43.7 டிகிரி வரை பதிவாகியுள்ளது. ஜெர்மனி மற்றும் செக் குடியரசிலும் வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் வெப்பம் மற்றும் வறட்சியால் நதிகள் வறண்டு, தொழிற்சாலைகள் முடங்கும்போது அவர்களது பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதனால் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, மருந்துகள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களின் தேவை பெருமளவு குறைந்து, இந்தியப் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

சாம்பியன் குழந்தை

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குழந்தை, கர்நாடக மாநில பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட் டியில் பங்கேற்று, 20 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கியிருக்கிறது. அந்தக் குழந்தையின் பெயர், ராதிகா காடியா. அவர் பிறந்து 2 வருடங்கள், 8 மாதங்களே ஆகின்றன. இத்தனைக்கும் ராதிகாவின் எடை வெறும் 17 கிலோதான். தனது சொந்த எடையை விட அதிக எடையை வெற்றிகரமாக தூக்கி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். ராதிகாவின் தந்தை சஞ்சய் காடியா ஒரு தொழில்முறை பளு தூக்குதல் வீரர் மற்றும் கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியவர். ராதிகாவின் அக்காவான ஆர்யாவும் பளு தூக்குதலில் பல சாதனைகள் செய்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய கூட்டுக்குடும்பம்

ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குர்லபள்ளி எனும் கிராமத்தின் அடையாளமே, நாகப்பா கூட்டுக் குடும்பம்தான் ட்விட்டர் செம வைரல். ஆம்; இந்தக் கிராமத்தில் சிம்மல நாகப்பா மற்றும் கொட்லா யல்லப்பாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆறு தலைமுறைகளாக ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இன்றைய நவீன காலத்தில் சிறு காரணங்கள் கூட குடும்பத்தைப் பிரித்துவிடுகின்றன.

இந்நிலையில் ஆறு தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து, அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது இந்தக் கூட்டுக்குடும்பம். மட்டுமல்ல, தெலுங்கு மாநிலங்களிலேயே மிகப்பெரிய கூட்டுக்குடும்பமும் இதுவே. ஆந்திராவில் கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆறு தலைமுறைகள் என்று இந்தக் குடும்பத்தினரை புகழ்கின்றனர். சிம்மல நாகப்பா மற்றும் கொட்லா யல்லப்பா ஆகிய இருவரது குடும்பங்களுடன் தொடங்கிய இந்தக் கூட்டுக் குடும்பத்தில், இன்று 83 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சாப்பாட்டுடன் சென்ற கால்பந்து அணி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு, நார்வே அணியினர் தங்களின் நாட்டிலிருந்து சுமார் 1,000 கிலோவுக்கும் அதிகமான உணவுப் பொருட்களை கொண்டு சென்றிருக்கின்றனர். இதைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 40 நாட்களுக்கு நடக்கும். வீரர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என 60க்கும் மேற்பட்டவர்கள் நார்வே அணியில் உள்ளனர்.

இந்த 1,000 கிலோ உணவுப் பொருட்களைக் கொண்டு, நார்வே அணியிருக்கு தினமும் 4 வேளை உணவுகளை தயாரித்து வழங்குகிறது, உலகப் புகழ்பெற்ற பிரபல சமையல் கலைஞர் ஆரோன் எஸ்பெலாண்ட் தலைமையிலான சமையல் குழு. விளையாட்டு வீரர்களுக்கு என்று குறிப்பிட்ட அளவு கலோரிகளும், புரதச்சத்தும் தேவைப்படுகின்றன. போட்டி நடக்கும் நாடுகளில் கிடைக்கும் உணவு அவர்களின் வழக்கமான உணவு முறையிலிருந்து மாறினால், அது வீரர்களின் உடல்தகுதியை பாதிக்கலாம். அதனால்தான் அவர்களின் உணவுத் தேவையை துல்லியமாகக் கண்காணிக்க இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அசுர வளர்ச்சி

உலக அளவில் அசுர வளர்ச்சியடைந்து வருகிறது, வெர்டிக்கல் ஃப்லிம். இதற்காகவே இப்போது சர்வதேச அளவில் பல குறும்படத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. வருங்காலங்களில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற பெரிய ஓடிடி நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் பயனாளிகளை கவர்வதற்காக வெர்டிக்கல் வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களை தயாரிக்கத் தொடங்குவார்கள் என்கின்றனர். ஏற்கனவே சில சர்வதேச ஓடிடி தளங்கள் ஸ்மார்ட்போனில் செங்குத்தாக பார்க்கும் வகையிலான கன்டன்ட்களை சோதனை செய்து வருகின்றன.

ஆரம்பத்தில் இது வெறும் ரீல்ஸ் செய்பவர்களுக்கானதாகப் பார்க்கப்பட்டாலும், எதிர்காலத்தில் முன்னணி திரைப்பட இயக்குநர்களும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் வெர்டிக்கல் படங்களை உருவாக்க முன்வருவார்கள். ஆஸ்கர் போன்ற உலகத்தரம் வாய்ந்த விருது விழாக்களில் ‘சிறந்த வெர்டிக்கல் திரைப்படம்’ என்ற புதிய பிரிவு உருவாக்கப்படலாம் என்கின்றனர்

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: