×

புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் ஒேர மாதத்தில் 4 சினை மாடுகளுக்கு கருச்சிதைவு: உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

 

சென்னை: சென்னை புதுப்பேட்டை பகுதியில் மாடுகளுக்கான காப்பகம் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது மொத்தம் 70 மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகள் சாலையில் திரியும் போது மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு இங்கு அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்த இடத்தில் 70 மாடுகளில் 40 மாடுகள் சினை மாடுகளாக உள்ளன. இந்நிலையில், தெருவில் திரியும் சினை மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் கடுமையாகவும் அலட்சியமாகவும் கையாள்வதால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 மாடுகளுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு மாடு உயிருக்குப் போராடும் நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. தெருவில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணி முன்பு சுகாதார ஆய்வாளர்களிடம் இருந்தது. சினை மாடுகளை கண்டறிவதில் அவர்களுக்கு சிரமம் இருந்ததால், இந்த பணி கால்நடை பராமரிப்புத் துறைக்கு மாற்றப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பார்வையிட்டதும் சினை மாடுகளை அடையாளம் காணும் திறன் இருக்கும் என்பதால் இந்த மாற்றம் நியாயமானதாகக் கருதப்பட்டது. ஆனால் நடைமுறையில் நேர்மாறான நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக புதுப்பேட்டை பகுதியில் உள்ள மாடுகள் காப்பகத்தில், சினை மாடுகள் என அடையாளம் காண மலக்குடலுக்குள் கையை நுழைத்து கட்டாயப் பரிசோதனை செய்தும் சரியாக மாடுகளை கையாளாமல் உள்ளதாக மாட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வெயில் காலம் என்பதால் பசு மாடுகளுக்கு உடல் வெப்பம் இயல்பிலேயே அதிகமாக இருக்கும். அதோடு அவற்றுக்கு வழங்கப்படும் தீவனங்களும் உடலுக்கு வெப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை. இந்தச் சூழலில், கடுமையான வெயில் நேரத்தில் மாடுகளின் உள்ளே கையை விட்டுப் பரிசோதனை செய்வதால், மாடுகள் தாங்க முடியாமல் கருச்சிதைவுக்கு உள்ளாகின்றன. இதில் சில மாடுகள் இறந்தும் போய் விடுகிறது. கருச்சிதைவு ஏற்பட்ட பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் நடந்துகொள்ளும் விதம் பொதுமக்களின் கோபத்தை மேலும் தூண்டியிருக்கிறது. மாட்டு உரிமையாளர்களை அழைத்து, ‘இனிமேல் மாடுகளைப் பிடிக்க மாட்டோம் என நாங்கள் எழுதித் தருகிறோம். நீங்களும் மாடு சினையாக இருந்தால் சாலையில் திரிய விடமாட்டோம் என எங்களிடம் எழுதித் தாருங்கள்,’ என்று கூறி, சமரசம் பேசி அனுப்பிவிடுவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் அழைப்புகளையே எடுக்கவில்லை என்று பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

வாயில்லா உயிர்களுக்கு இழைக்கப்படும் இந்த கொடுமைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், சினை மாடுகளை அடையாளம் காண மலக்குடல் பரிசோதனை முறையை கைவிட்டு அல்ட்ராசவுண்ட் அல்லது வெளிப்புற உடல் பரிசோதனை போன்ற மாற்று முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதி மக்கள் கோருகின்றனர். கால்நடை மருத்துவத்தில் சினை மாடுகளை கண்டறிய மலக்குடல் பரிசோதனை ஒரு அங்கீகரிக்கப்பட்ட முறைதான். ஆனால் அது மிகுந்த கவனத்துடனும், சரியான சூழலிலும் செய்யப்பட வேண்டியது. கோடை வெப்பத்தில், போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் இதனை செய்வது கர்ப்பிணி மாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என கால்நடை நிபுணர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.சென்னை மாநகராட்சி இந்த புகார்களை தீவிரமாக விசாரித்து, குற்றம் நிரூபணமானால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags : Pudupettai ,Chennai ,
× RELATED ஓட்டுநர்கள், நடத்துநர்கள்...