சென்னை: தவெக அரசின் அலட்சியப் போக்காமல் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை கிடு கிடுவென உயர்த்தப்பட்டுள்ளதால் கட்டிடம் கட்டுவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வீட்டை கட்டிப்பார், கல்யாணம் செஞ்சு பார்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. இரண்டுமே கடினம் என்பார்கள். ஆனால் தற்போது இருக்கும் இரண்டுமே சவாலான ஒன்றாக மாறியுள்ளது. நடுத்தர குடும்பத்தினர், பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட கூட்டம் கூட்டாமல் கோயிலில் சிம்பிளாக கல்யாணம் கூட செஞ்சிடலாம். ஆனால் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது நடுத்தர வர்க்கத்தினரின் கனவாகவே போய்விடும் என்ற அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலை உயர்வு கதிகலங்க வைத்துள்ளது.
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட முக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை யூனிட்டுக்கு ரூ.1000 வரை அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் உற்பத்தியை பெரிதும் பாதித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், முறைகேடாக இயங்குவதாக கூறி பல குவாரிகளை மூடிவிட்டனர். உரிய ஆய்வு நடத்தி தவறு நடக்கும்பட்சத்தில் அவற்றின் மீது அபராதம் விதிக்கலாம் அல்லது உரிய நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து பல குவாரிகளை ஒரே நேரத்தில் மூடியதால் உற்பத்தி தடைபட்டு தற்போது பெரிய அளவில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு கன மீட்டருக்கு ரூ.90 என்ற அளவில் விதிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது டன் என்ற புதிய அளவில் விதிக்கப்படுவதால் ஒரு கனமீட்டர் கருங்கல்லுக்கு இதுவரை ரூ.90 என்ற அளவில் வசூலிக்கப்பட்டு வந்த ராயல்டி, இப்போது ரூ.165 ஆக உயர்ந்து விட்டது. அதை மீண்டும் ரூ.90 ஆக குறைப்பதுடன், புதிதாக ஒரு டன்னுக்கு ரூ.90 என்ற விகிதத்தில் விதிக்கப்பட்டுள்ள சிறு கனிம நிலவரியையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கல் குவாரிகள், கிரஷர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் கடந்த 16ம் தேதி வேலை நிறுத்தம் மேற்கொண்டு வந்தனர்.
அவர்களின் கோரிக்கைகள் குறித்து இரு முறை பேச்சு நடத்திய தமிழக அரசு, கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறி விட்டது. அதற்கு பதிலாக ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்வதற்கு கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதுவும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இப்படி தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்று பல்வேறு கட்டிட பணிகளை நிறுத்தும் அளவுக்கு கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்திருப்பது தமிழகம் முழுவம் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, சராசரியாக ஒரு யூனிட் ஜல்லி விலை ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.5 ஆயிரமாகவும், எம்.சாண்ட் விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.6 ஆயிரமாகவும், பி.சாண்ட் விலை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மாவட்டங்களுக்கு ஏற்ப இந்த விலை உயர்வில் சிறு சிறு வேறுபாடுகள் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காரணம் தமிழக அரசின் தவறான கொள்கை தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த திடீர் விலையேற்றம் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டை தலைகீழாக மாற்றிவிடும் என வீடு கட்டுவோரும், கட்டுமான நிறுவனங்களும் பெரும் கவலையடைந்துள்ளனர். ஜல்லி மற்றும் மணல் விலையேற்றம் மட்டுமல்லாமல், இவற்றை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வரும் நாட்களில் சிமென்ட் உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக துறை சார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
விலை உயர்வை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுமானத்துக்கு தேவையான எம்.சாண்ட் விலை உயர்வால் கட்டுமான டெவலப்பர்களுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அதேபோல தனியாக புதிய வீடுகளை கட்டுபவர்களும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விலை உயர்வை தடுக்க தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்டிடம் கட்டுபவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
ஏற்கனவே பல்வேறு காரணங்களால் கட்டுமானத் துறை மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் திடீர் விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. அடித்தள பணிகள் மற்றும் பூச்சுப் பணிகளுக்கான செலவு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவு தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்ட இடங்களில் விலை உயர்வுக்கான தொகையை பெறுவது கடினம். இதனால் கட்டுமான துறையை சேர்ந்தவர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானப் பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்னை பெரிய அளவில் வெடிக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அழுத்தமான கோரிக்கையை முன் வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
