×

சமூக வலைதள கணக்குகள் முடக்கம் நீக்கப்பட்டதால் காவல்துறை நடவடிக்கையை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிட்ட சமூக வலைதள கணக்குகளின் முடக்கம் நீக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கு செல்லத்தக்கதல்ல என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி, எக்ஸ் தள கணக்குகளை முடக்கி, தமிழக சைபர் கிரைம் கடந்த மே 8ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து விஷ்வ இந்து பரிஷத் வட தமிழகத்தின் தலைவர் சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அரசியல் ரீதியான விமர்சனங்களை முறையாக ஆய்வு செய்யாமல், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி எக்ஸ் தள கணக்குகளை முடக்குவது கருத்துரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழக சைபர் க்ரைம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், சமூக வலைதள கணக்குகளின் முடக்கத்தை நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே 18 சமூக வலைதள பக்கங்களின் முடக்கத்தை நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் முடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன. சம்பந்தப்பட்ட பதிவுகளும் அகற்றப்பட்டு விட்டன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல என கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Tamil Nadu Cyber Crime Branch ,Tamil Nadu government… ,
× RELATED ரயில்வே மேம்பால பணிக்காக முன்...