×

பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ மீதான வழக்கை அமலாக்கத்துறை கையில் எடுத்துள்ளது. இதனால் ஜான் பிரிட்டோவின் தங்கை லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் லீமா ரோஸ் மார்ட்டின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் போதைப் பொருள் வழக்கில் சிக்கியிருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், டெய்சி தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி என்பதால் அவர்கள் மூலம் தவெக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டென்மார்க், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சாலை மார்கமாக இந்தியாவுக்குள் அதிகளவில் உயர் தர போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், உணவுப்பொருள், தானியங்கள் ஏற்றுமதி உள்ளிட்டவைகள் மூலம் போதை பொருட்கள் இந்தியாவுக்குள் சாலை மார்க்கமாக கடத்தி வரப்படுகிறது. அப்படி கடத்தி வரும் பல நூறு கோடி போதை பொருட்கள் ரயில் மூலம் சென்னை வழியாக கொண்டு வந்து ராமநாதபுரம் மற்றும் மண்டபம் வழியாக கடல் மார்கமாக படகுகள் மூலம் இலங்கைக்கு தடையின்றி கடத்தப்பட்டு வருகிறது. போதை பொருள் கடத்தல் கும்பல், மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகளின் கவனத்தை திசைத்திருப்பிவிட்டு தமிழகம் வழியாக கடத்தி வரப்பட்ட போதை பொருட்கள் இலங்கைக்கு படகுகள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இது கடந்த பல ஆண்டுகளாக தடையின்றி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல் மியான்மார், டென்மார்க்போன்ற நாடுகளில் இருந்து உயர் ரக போதை பொருட்கள் இந்திய கடலோர எல்லையான மன்னார் வளைக்குடா வழியாக இலங்கைக்கு கடந்த 2024 மார்ச் 5ம் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அன்று அதிகாலை 5 மணிக்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்திய கடலோரக் காவல்படையினருடன் இணைந்து நடத்திய கூட்டு அதிரடி சோதனையில், இலங்கைக்குக் மீனவர்கள் படகுகள் மூலம் கடத்தப்பட்டு வந்த ரூ.108 கோடி மதிப்புள்ள 99 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்தனர்.

அப்போது கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த தகவலின் படி, இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில் கோவை மாவட்டம் சத்தியமங்கலம் சிவநந்தபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ஜான் பிரிட்டோ(57) என்பவர் இருந்தது தெரியவந்தது. இவர் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலின் நேரடி தொடர்பில் உள்ள முக்கிய போதை பொருள் கடத்தல் மன்னன் என்று விசாரணையில் தெரியவந்தது. ஜான் பிரிட்டோ தான் இந்தியாவுக்கான போதை பொருள் கடத்தலை தலைமை ஏற்று இலங்கைக்கு போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இவர் மூலம் 15 நாடுகளுக்கு போதை பொருள் கடத்தி வந்ததும், அதன் மூலம் ஜான் பிரிட்ேடா பல ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக சம்பாதித்து, அந்த பணத்தை தனது உறவினர்கள் மூலம் பல நிறுவனங்களில் முதலீடு செய்து வந்ததும் தெரியவந்தது. பல ஆண்டுகளுக்கு மேலாக ஜான் பிரிட்டோ சர்வதேச போதை பொருள் கும்பல் தலைவனாக இருந்து பல ஆயிரம் டன் போதை பொருட்கள் மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தெரியாமல் ‘குருவிகள்’ உதவியுடன் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் பகுதிக்கு போதை பொருள் லாரிகள் மற்றும் கார்கள் மூலம் கடத்தி வந்து மீனவர்கள் உதவியுடன் இலங்கைக்கு சர்வதேச கடல் எல்லையை தண்டி போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. தமிழகத்திற்குள்ளும் போதைப் பொருளை பல ஆண்டுகளாக ஜான்பிரிட்டோ விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், ஜான் பிரிட்டோ உத்தரவுப்படி சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவை சேர்ந்தவர் யேசுராஜ் (35), மோனிஷா ஷீலா, பிலோமன் பிரகாஷ் ஆகிய 3 பேர் உதவியுடன் கடந்த 2024ம் ஆண்டு சென்னையில் இருந்து ரயில் மூலம் கடத்தி செல்லும் போது, மதுரை ரயில் நிலையத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு ரயிலில் அதிரடி சோதனை நடத்தி ரூ.150 கோடி மதிப்புள்ள 37.645 கிலோ மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் ஜான் பிரிட்டோ முக்கிய குற்றவாளி என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரணையில் தெரியவந்தது.

இப்படி கடத்தி வரும் போதை பொருட்களை சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ ராமநாதபுரத்தில் ரெமிஸ்தான், ராமிஷ், ஜான்சான், பிரதாப் ஆகிய மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து படகு உரிமையாளர்கள் உதவியுடன் கடல் மார்கமாக இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த பணம் அனைத்தும் ஜான் பிரிட்ேடா ஹவாலா மூலம் வரும் பணத்தை கொடுத்து தடையின்றி போதை பொருள் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. ஜான் பிரிட்டோவை கேரளா, குஜராத் மாநிலங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தேடி வருகின்றனர். இதனால் அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவாகி தற்போது மியன்மார், டென்மார் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ஜான் பிரிட்டோவை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடி வருகின்றனர்.

இந்த வழக்குகள் போதை பொருள் கடத்தல் வழக்கு சிறப்பு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. அதேநேரம் போதை பொருள் கடத்தலில் பல நூறு போடி சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அமலாக்கத்துறை ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த மே 26ம் தேதி அமலாக்கத்துறை இலங்கைக்கு சட்டவிரோதமாக ரூ.258 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் தொடர்பாக ஜான் பிரிட்டோ கூட்டாளிகள் வசிக்கும் சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் சோதனை நடத்தினர். 5 இடங்களில் நடந்த சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். குறிப்பாக சோதனையில், ஜான் பிரிட்டோ போதை பொருள் விற்பனை மூலம் கிடைத்த பல நூறு ேகாடி பணத்தை தனது ரத்த உறவினர்கள் மூலம் சட்டவிரோதமாக அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் முதலீடு செய்து இருந்த ஆவணங்கள் சிக்கியதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம், கடந்த 2018ம் ஆண்டு போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ போதை பொருள் விற்பனை மூலம் கிடைத்த பல ஆயிரம் கோடி பணத்தை சட்டவிரோதமாக வெளிநாடுகளில் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் பெயரில் முதலீடு ெசய்து இருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக நடந்த சோதனையிலும் சட்டவிரோதமாக ஜான் பிரிட்டோ பணத்தை தனது உடன் பிறந்த சகோதரியான லீமா ரோஸ் மார்ட்டின்(54), தனது சகோதரியான லீமா ரோஸ் மார்ட்டின் மகளான சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி மஹாராணி சின்னம்மா சாலையில் வசித்து வரும் டெய்சி ஆதவ் அர்ஜூனா(30) மற்றும் உறவினர் ஜான் கென்னடி ஆகியோர் பினாமியாக இருந்து வந்ததும், அதற்கான ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான்பிரிட்டோ, அவரது சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின், லீமா ரோஸ் மார்ட்டின் மகளான டெய்சி ஆதவ் அர்ஜூனா, உறவினர் ஜான் கென்னடி ஆகியோர் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்தது. அதைதொடர்ந்து எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் ஜான் பிரிட்டோ, சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின், மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா, ஜான் கென்னடி ஆகியோர் வெளிநாடுகள் தப்பி செல்ல முடியாத படி அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த வழக்கில் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் பல லட்சம் முன்வைப்பு தொகை ெசலுத்தி முன்ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அப்போது எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் லீமா ரோஸ் மார்ட்டின் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி வெளிநாடுகள் சென்றால் அவர்களை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டது.

அவசர தேவைக்கு வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால், ரூ.1 லட்சம் நிபந்தனை தொகை செலுத்திவிட்டு நீதிமன்ற உத்தரவுப்படி செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, தற்போது அதிமுக சார்பில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். லீமா ரோஸ் மார்ட்டின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா கணவரான ஆதவ் அர்ஜூனா தவெக கட்சி சார்பில் சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியில் வெற்றி பெற்றார். தற்போது டெய்சி ஆதவ் அர்ஜூனா கணவர் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் சிறிய துறைமுகங்கள், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைகளின் அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ வின் உடன் பிறந்த சகோதரி லீமா ரோஸ் மார்ட்டின் அவரது சகோதரியின் மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோர் வெளிநாடுகள் செல்ல வேண்டி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தங்களது பாஸ்போட்டுகள் விடுவிக்க கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். அப்போது தான் லீமா ரோஸ் மார்ட்டின், அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கும் சர்வதேச போதை பொருள் குற்றவாளியான ஜான் பிரிட்டோவுக்கு உள்ள ரத்த உறவுகள் என்ன என்பது குறித்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் போட்டியிட்ட போது தனது விண்ணப்பத்தில் தன் மீது 4 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில் தனது சகோதரன் மற்றும் மகள் மீது உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 533, 2018 வழக்கை முதல் வழக்காக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிடோவுக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் அவரது மகள் டெய்சி ஆதவ் அர்ஜூனா தொடர்புகள் அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகி உள்ளது.

தமிழகத்தில் முதல்வராக உள்ள தவெக தலைவர் விஜய், மாநிலத்தில் மூளை முக்கு எல்லாம் போதை பொருட்கள் பரவி கிடக்கிறது அதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து வருகிறார். தவெக அரசியில் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியாரும் அதிமுக லால்குடி சட்டமன்ற உறுப்பினரான லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதை பொருள் மூலம் கிடைத்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகின்றனர். உண்மை இருப்படி இருக்க முதல்வர் விஜய் எப்படி தமிழகத்தில் போதை பொருள் ஒழிக்க போகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசு, தவெக – காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதால், தவெக அரசுக்கு நெருக்கடியை அளிக்கும் வகையில், கடந்த இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் இருந்த போதை பொருள் கடத்தல் மன்னன் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது உறவினர்கள் மீதான போதை பொருள் கடத்தல் வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்குகளை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதனால் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் தவெக அரசின் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி மற்றும் அவரது மாமியாரான அதிமுக லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் ஆகியோர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்த சம்பவத்தால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க, போதை பொருள் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் முதல்வர் விஜய். ஆனால் தவெக அரசில் அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜூனாவின் மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் எம்எல்ஏ மீது போதை பொருள் மூலம் கிடைத்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகின்றனர். பின் எப்படி தமிழகத்தில் போதை பொருளை விஜய் ஒழிக்கப் போகிறார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Daisy ,John Brito ,Aadav Arjuna ,Lema Rose Martin ,Chennai ,John Britto ,Lema Rose ,
× RELATED ரயில்வே மேம்பால பணிக்காக முன்...