×

சென்னை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று சென்னை, நீலகிரி உள்பட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக பதிவானது. குறிப்பாக மீனம்பாக்கத்தில் 103.46, நுங்கம்பாக்கத்தில் 102.2, கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா 102.92, நாகப்பட்டினத்தில் 102.2 டிகிரி பாரன்ஹீட் என 9 இடங்களில் நேற்று வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது.

அதேநேரம், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழகத்தில் மேற்கு மலை தொடரையொட்டிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் மழைப் பெய்துவருகிறது. குறிப்பாக, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலோர கர்நாடக பகுதிகளிலிருந்து கடலோர ஆந்திர பகுதிகள் வரை ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இன்று தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசவுகரியம் ஏற்படலாம்.

இன்று முதல் 12ம் தேதிவரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tags : Chennai ,Nilgiris ,Meteorological Department ,Tamil Nadu ,Meenambakkam 103.46 ,Nungambakkam 102.2 ,Cuddalore… ,
× RELATED அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல்...