சென்னை: மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடு தான் தமிழகத்தில் தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளரும், செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பனையூர் பாபு தலைமையில் 1,000க்கும் மேற்பட்டோர் நேற்று திமுகவில் இணைந்தனர்.
விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பொதுவாகச் சிலர் ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுகிற போது, மற்றொரு இயக்கத்தில் சென்று சேருகிற போது, சிறிது விமர்சனம் செய்து, ஏன் தரம் தாழ்ந்து கூடப் பேசும் பாணியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பனையூர் பாபு அப்படி அல்ல. அரசியல் மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அடக்கத்தோடு சுட்டிக்காட்டி, ஏற்கனவே ஓர் அறிக்கையாக வெளியிட்டார்.
அதில், யாரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் இல்லை; அமைதியாக, அழகாக, அடக்கமாக அவர் கையாளும் விதம், இப்போது கூடப் பேசும்போது நீங்கள் பார்த்திருக்கலாம், யாரையாவது விமர்சனம் செய்து பேசினாரா? இல்லை. எதற்காக இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறோம், அதைத்தான் அவர் இங்கே அழகாக எடுத்துச் சொல்லி பேசியிருக்கிறார்.
பனையூர் பாபுவின் செய்யூர் தொகுதிக்குச் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி அவரே சொன்னார். இருந்தாலும் நானும் அதை வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன். செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதிய சிப்காட் தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள். இவ்வாறு பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதற்குக் காரணமாக இருந்தவர், செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த பனையூர் பாபு தான்.
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள் என்று அறிக்கை வெளியிட்ட ஒரு கொள்கைவாதிதான், இங்கே வந்திருக்கும், இந்த இயக்கத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய பனையூர் பாபு. திமுகவைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது தான் வேலை அதிகமாக இருக்கும்.
அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், ‘‘நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்” என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபுவையும், உங்களையும் நான் மீண்டும் வரவேற்கிறேன். நீங்கள் ஏற்கனவே இருந்த இயக்கம். அந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் கூடாது; விமர்சிக்கத் தேவையில்லை.
ஏனென்றால் அண்ணா, ‘‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்றுதான் சொல்லி இருக்கிறாரே தவிர, யாரையும் குறைத்து மதிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதைத்தான் இங்கே நம்முடைய பாபு எடுத்துக் காட்டியிருக்கிறார். இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம் நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் நான் சொன்னேன், ‘‘ஆறு மாதங்களுக்கு இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை” என்று.
ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது; வந்துவிட்டது. அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல. மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடு தான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, திமுக ஈடுபடும் எந்தப் பணிகளாக இருந்தாலும், அந்தப் பணிகளுக்கு நீங்களும் ஒத்துழைப்பு தருவதற்காக வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல, கலைஞர் அரங்கத்திற்கே வந்திருக்கிறீர்கள்; அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை எல்லாம் வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
