சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது. மேலும், இன்று நீலகிரி, தேனி உள்ளிட்ட 10 மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
தமிழகம் முழுவதும் 12 இடங்களில் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது. குறிப்பாக கடலூர் 105.2, சென்னை மீனம்பாக்கம் 104.7, தொண்டி 103.2, சென்னை நுங்கம்பாக்கம் 103, வேலூர் 102.7, நாகை மற்றும் தஞ்சை தலா 102.2, பரங்கிப்பேட்டை 101.8 திருச்சி 101.6, மதுரை நகரம் 101.1, திருத்தணி 100.6, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் வெயில் பதிவாகியுள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைப் பொழிவும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 61 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலோர கர்நாடகம் மற்றும் கடலோர ஆந்திரம் வழியாக வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்று தமிழகத்தில் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும் சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்.
மேலும், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம். இன்றும் நாளையும் தென் தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழகத்தின் கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
