காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளுக்கு பணம் நிறுத்தம்: கடன் வாங்கியவர்கள் பரிதவிப்பு

காரியாபட்டி, ஜூன் 8: காரியாபட்டி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் கடன் வாங்கி வீடுகளின் கட்டுமான பணிகளை தொடங்கியவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசின் சார்பில் ஏழை எளிய மக்களும் வீடு கட்டி குடியிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் இந்த திட்டத்தால் ஆயிரக் கணக்கான மக்கள் பயன்பெற்றனர். காரியாபட்டி ஒன்றியத்தில் கடந்த பிப். மாதம் 101 பயனாளிகள் தேர்வு செய்யப் பட்டு, அவர்கள் சொந்த வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து பயனாளிகள் வீடு கட்டும் பணிகளை தொடங்கினர். இந்த திட்டத்தில் ஒவ்வொரு கட்டங்களாக வீடு கட்டும்போது, பயனாளிகளுக்கு பல்வேறு தவணைகளாக அரசுத்தரப்பில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் வீடு கட்டும் வேலைக்கு உத்தரவு வழங்கிய பயனாளிகளுக்கு இதுநாள் வரை அதற்கான பணிகளை தொடங்க பணம் வழங்கப்படவில்லை. இதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பயனாளிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான படிவங்கள் கணினியில் வராமல் உள்ளது’ என கூறுகின்றனர்.

இதுகுறித்து காரியாபட்டி மந்திரிஓடை பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவர் கூறும்போது, ‘கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு எங்களுக்கு வேலைக்கான உத்தரவு கொடுத்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணிகளை தொடங்க பணம் வழங்கப்படவில்லை. இதை நம்பி பல இடங்களில் கடன் வாங்கி வீடு கட்டும் பணிகளை தொடங்கி விட்டோம். கலைஞர் கனவு இல்லம் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் கீழ் வீடு பயனாளிகளக்குரிய பணம் வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது. அதுகுறித்து கேள்வி எழுப்பினால், கணினியில் படிவங்கள் வரவில்லை என்று, அதிகாரிகள் காரணம் கூறுகின்றனர். தற்போது கடன் வாங்கி வீடுகளின் ஒரு பகுதியை கட்டியுள்ள நாங்கள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும்நிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, எங்கள் வீடுகள் முழுமையடைய தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’’ என்றார்.

Related Stories: