விருதுநகர், ஜூன் 8: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு காரணங்களுக்காக சிசிடிவி கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விருதுநகர் புதிய பேருந்து நிலையம், 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரவில்லை. அவ்வப்போது புதிதாக பொறுப்பேற்கும் கலெக்டர்கள், புதிய பேருந்து நிலையத்திற்கு பஸ்கள் வருவதை உறுதி செய்வர். ஆனால் ஒரு சில மாதங்கள் மட்டுமே பெயரளவுக்கு புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்படும். அதன்பிறகு மீண்டும் பழைய நிலையே தொடரும். இந்நிலையில் அதிகாரிகள் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகளால், கடந்த ஓராண்டு காலமாக புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது.
இந்தப் பேருந்து நிலையத்திற்கு ராஜபாளையம், சிவகாசி, மதுரை, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளும், டவுன் பஸ்களும் வந்து செல்கின்றன. இந்த பேருந்து நிலையத்தில் ஏற்கனவே கட்டப்பட்ட டூவீலர் காப்பகம் மிகவும் சிறிய அளவில் செயல்படாமல் உள்ளது. இதனால், பல்வேறு பணிகளுக்காக வெளியூர் செல்லக்கூடிய பயணிகள், தங்களது டூவீலர்களை, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், போதிய பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் சிசிடிவி இல்லாததால் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்டறிய முடியாமல் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து விருதுநகரை சேர்ந்த பாஸ்கரன் கூறியதாவது: பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் போதிய கடைகள் இல்லை. டூவீலர்கள் நிறுத்த இடம் இல்லாததால், பஸ் ஸ்டாண்ட் வளாகத்திற்குள் வாகன ஓட்டிகள் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இந்த வாகனத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மேலும் சிசிடிவி கண்காணிப்பு காமிராக்கள் இல்லை. போலீசாரும் பாதுகாப்பிற்கு வருவதில்லை. எனவே புது பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்த போதிய இடம் ஒதுக்க வேண்டும். சிசிடிவி காமிராக்கள் பொருத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
