கோவை, ஜூன் 8: கோவை நகர், புறநகரில் குட்கா, பான்பராக் உள்ளிட்ட பான் மசாலா பொருட்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட அளவில் விற்பனை உச்சத்தில் இருக்கிறது. நகரில் குறிப்பிட்ட சில வணிக பகுதிகளில் குடோன்களில் மூட்டை மூட்டையாக பான்பராக், குட்கா பொருட்களை பதுக்கி வைப்பதும், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடைகளுக்கு சப்ளை செய்வதும் நடக்கிறது. தினமும் நகர், புறநகரில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பான் பொருட்கள் பொருட்கள் விற்பனையாகி வருகிறது. ஏரியாவிற்கு ஏற்ப சிலர் குடோன்களை அமைத்து அங்கேயிருந்து கடைகளுக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் பொருட்களை இரு மடங்கு விலைக்கு விற்றாலும் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.
ஏரியா வாரியாக போதை பாக்கு விற்கும் கடைகள் விவரங்கள், வியாபாரிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதிக முறை அபராதம் விதித்தும் திருந்தாமல் மீண்டும் போதை பாக்கு விற்பனை செய்யும் கடைக்காரர்கள் யார் என கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் போதை பாக்கு சப்ளை செய்யும் டீலர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியும் நடக்கிறது. போதை பாக்குகளை பதுக்கி வைக்கும் இடங்கள், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி வட்டாரங்களில் போதை பாக்கு, புகையிலை விற்பனையை முழுவதும் தடை செய்யும் வகையில் போலீசார் தீவிரமாக செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
