×

காஸ் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அவதி

கோவை, ஜூன் 8: சமையல் காஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு உயர்த்தி தர வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சமையல் எரிவாயு (எல்பிஜி) புதிய இணைப்பு மற்றும் இரண்டாவது சிலிண்டர் பெறுவதற்கான பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாலும், தொடர்ந்து சமையல் காஸ் விலை உயர்வு காரணமாகவும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் வணிக மற்றும் வீடுகளுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 21 நாளில் இருந்து நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமங்களில் 45 நாட்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, காஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.89 உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டு ரூ.971-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வினால் நகர் மற்றும் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தவிர, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு எரிவாயு விநியோக ஏஜென்சிகள் புதிய காஸ் இணைப்பு மற்றும் கூடுதல் சிலிண்டர் பதிவு செய்ய வந்த பொதுமக்களுக்கு, புதிய இணைப்பு மற்றும் இரண்டாவது சிலிண்டர் பதிவு செய்வது அடுத்த அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான அறிவிப்புகளையும் தங்களின் மையங்களில் ஒட்டியுள்ளனர். இதனால் புதிய குடும்பத்தினர், வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் மற்றும் ஒற்றை சிலிண்டர் பயன்படுத்தி வந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு சிலிண்டர் காலியான பிறகு மாற்று சிலிண்டர் இல்லாததால் பல குடும்பங்கள் சமைப்பதற்கே சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் புதிய இணைப்பு மற்றும் கூடுதல் சிலிண்டர் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலர் பதிவு செய்வதற்காக எரிவாயு முகமைகளுக்கு நேரில் சென்ற பின்னரே இந்த தகவல் தெரிய வருவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தற்காலிக நிறுத்தத்திற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் ஏற்கனவே சிலிண்டர் வைத்திருக்கும் சிலர் வேறு நபர்களின் ஆதார் எண்ணை வைத்து புதிய சிலிண்டர்களை முறைகேடாக வாங்குவது போன்ற சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய காஸ் இணைப்பு, கூடுதல் சிலிண்டர் பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, புதிய இணைப்பு மற்றும் கூடுதல் சிலிண்டர் பதிவை விரைவில் மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இது குறித்து எண்ணெய் நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெளிவான விளக்கத்தை வெளியிட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடையாம்பாளையத்தை சேர்ந்த தீபிகா கூறுகையில்:
“நாங்கள் தற்போது தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். புதிய காஸ் சிலிண்டர் வேண்டி விண்ணப்பிக்க சென்றால், காஸ் சிலிண்டர் விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக கூறுகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இதையே கூறி வருகின்றனர். எப்போது புதிய சிலிண்டர் கிடைக்கும் என கேட்டால், எங்களுக்கே தெரியாது என பதில் அளிக்கின்றனர். கமர்சியல் சிலிண்டர் விலை மிக அதிகமாக இருக்கும் நிலையில், எங்களால் சமாளிக்க முடியாத நிலை இருக்கிறது. அரசு புதிய இணைப்பு மற்றும் கூடுதல் சிலிண்டர் பதிவை விரைந்து துவங்க வேண்டும். சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்றார்.

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சகுந்தலா கூறுகையில்:
“காஸ் சிலிண்டர் விலை ரூ.29 அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இப்போது ரூ.971 சிலிண்டர் புக்கிங் செய்ய கேட்கின்றனர். இது தவிர சிலிண்டர் கொண்டு வந்து போடும் நபருக்கு ரூ.50 கொடுக்க வேண்டும். ஆயிரத்தை கடந்து சிலிண்டர் விலை சென்றால் எப்படி சமாளிப்பது. இந்த விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கிறது” என்றார்.

சூலூர் பகுதியை சேர்ந்த சிந்துஜா கூறுகையில்:
“கடந்த மூன்று மாதமாக அடிக்கடி சிலிண்டர் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் விலை உயரும் என கூறுகின்றனர். ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் காய்கறிகள் விலை அதிகரித்து இருக்கிறது. தற்போது சிலிண்டர் விலை உயர்வு என்பது பொருளாதார ரீதியாக குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் அல்லது சிலிண்டருக்கான மானியத்தை அதிகரித்து தர வேண்டும்” என்றார்.

Tags : Coimbatore ,central government ,Coimbatore district ,
× RELATED வடகோவை ரயில்நிலைய மேம்பாட்டு பணிகள்